Tuesday, 20 November 2018

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் வருமாறு:-

சிவ சிவ.

சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள் வருமாறு:-

1. பஞ்ச பூதங்களால்தான் இந்த பிரபஞ்சமே இயங்குகிறது. பஞ்ச பூதங்களில் ஆகாயம் முதலில் தோன்றியது. அந்த வகையில் பஞ்சபூதத் தலங்களில் முதல் தலமாக சிதம்பரம் உள்ளது.

2. பஞ்சபூத தலங்கள் மற்றும் பாடல் பெற்ற தலங்களை வழிபட விரும்புபவர்கள் சிதம்பரத்தில் இருந்து தொடங்குவது நல்லது என்பது ஐதீகமாக உள்ளது. 3. வைணவத்தில் கோவில் என்றால் ஸ்ரீரங்கத்தை குறிப்பது போல சைவத்தில் கோவில் என்றால் சிதம்பரம் நடராஜரையே குறிக்கும்.

4. சிதம்பரம் நடராஜர் ஆலயம் சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ளது.

5. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய 3 பெருமைகளையும் சிதம்பரம் கொண்டுள்ளது.

6. சிதம்பரம் நடராஜரை எல்லா கடவுள்களும் வந்து வழிபட்டு பேறு பெற்றனர். இதை உணர்த்தும் வகையில் நடராஜர் ஆலயம் முழுவதும் ஏராளமான சன்னதிகள் உள்ளன.

7. நடராஜர் ஆலயத்துக்குள் தினமும் 27 லிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன. இது தவிர ஏராளமான லிங்கங்கள் உள்ளன.

8. சிவாலயங்களில் கர்ப்பக்கிரக கோஷ்டத்தை சுற்றி தெய்வ உருவங்கள் இருக்கும். சிதம்பரத்தில் அத்தகைய அமைப்பு இல்லை.

9. திருவண்ணாமலை போன்றே எமன், சித்ரகுப்தன் இருவரும் சிதம்பரம் தலத்திலும் வழிபட்டுள்ளனர். இதை உறுதிப்படுத்தும் வகையில் பிரகாரத்தில் எமனுக்கும், சிவகாமி அம்மன் சன்னதி பகுதியில் சித்ரகுப்தனுக்கும் சிலை உள்ளது.

10. இங்குள்ள 4 கோபுரங்களும் சிறப்பு களஞ்சியங்களாக உள்ளன. கிழக்கு கோபுரம் ஆடல் கலையின் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ளது. மற்றொரு கோபுரத்தில் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி, பராசக்தி, விநாயகர், முருகன், விஷ்ணு, தன்வந்திரி, இந்திரன், அக்னி, வாயு, குபேரன், புதன், நிருதி, காமன், பத்ரகாளி, துர்க்கை, கங்காதேவி, யமனாதேவி, ராகு, கேது, நாரதர், விசுவகர்மா, நாகதேவன், சுக்கிரன், லட்சுமி, வியாக்ரபாதர், அகத்தியர், திருமூலர், பதஞ்சலி ஆகியோர் சிலைகள் உள்ளன.

11. புத்த மதத்தை தழுவிய மன்னன் அசோகன், தன் படை ஒன்றை அனுப்பி, சிதம்பரம் கோவிலை புத்த விகாரமாக மாற்ற முயன்றான். அவர்களை மாணிக்கவாசகர் தன் திறமையால் ஊமையாக்கி சிதம்பரத்தை காப்பாற்றினார்.

12. தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் பார்க்க முடியாதபடி சிதம்பரம் ஆலயத்தில் மட்டுமே அரிய வகை வித்தியாசமான சிவ வடிவங்களைப் பார்க்க முடியும்.

13. தமிழ் மொழியை மட்டுமின்றி தமிழர் பண்பாட்டு கலாச்சாரத்தை பாதுகாத்த சிறப்பும் சிதம்பரம் ஆலயத்துக்கு உண்டு.

14. அறுபத்து மூவர் வரலாறு மட்டும் சிதம்பரம் கோவிலில் பாதுகாப்புடன் வைக்கப்படாமல் இருந்திருந்தால் 63 நாயன்மார்கள் பற்றி குறிப்புகள் நமக்கு தெரியாமல் போய் இருக்கும். அந்த சிவனடியார்களை நாம் தெரிந்து கொள்ளாமலே போய் இருப்போம்.

15. சிதம்பரம் கோவிலுக்குள் திருமுறைகள் உள்ளது என்பதை இந்த உலகுக்கு சொன்னவர் பொல்லாப் பிள்ளையார் ஆவார். எனவே விநாயகரை 'மூத்த நாயனார்' என்கிறார்கள்.

16. சிதம்பரம் தலத்தை நால்வரும் புகழ்ந்து பாடியுள்ளனர். எனவே திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரின் குரு பூஜை பெரிய திருவிழா போல இத்தலத்தில் கொண்டாடப்படுகிறது.

17. மாணிக்கவாசகர் மட்டுமின்றி நந்தனார், கணம்புல்லர், திருநீலச் கண்டக் குயவர் ஆகியோரும் தில்லையில் முக்தி பெற்றனர்.

18. சிதம்பரத்தில் நடக்கும் திருவிழாக்களில் திருவாதிரை திருவிழாவும் முக்கியமானது. அன்று ஒரு வாயாவது திருவாதிரைக்களி சாப்பிட வேண்டும் என்பார்கள்.

19. ஒரு தடவை இத்தலத்தில் கொடியேற்றம் நடந்த போது கொடி ஏறாமல் தடைபட்டது. அப்போது உமாபதி சிவாச்சாரியார் என்பவர் கொடிக்கவி என்ற பாடலை பாடினார். அடுத்த நிமிடம் கொடி மரத்தில் தானாகவே ஏறிய அற்புதம் நடந்தது.

20. தேவநாயனார் என்பவர் நடராஜர் மீது ஒரு சித்தாந்த பாடலை பாடி கருவறை முன்புள்ள வெள்ளிப்படிகளில் நூலை வைத்தார். அப்போது படியில் உள்ள ஒரு யானை சிற்பம் உயிர் பெற்று அந்த நூலை எடுத்து நடராஜரின் காலடியில் எடுத்து வைத்தது. இந்த அதிசயம் காரணமாக அந்த நூலுக்கு திருக்களிற்றுப்படியார் என்ற பெயர் ஏற்பட்டது.

21. முத்து தாண்டவர் என்ற புலவர் தினமும் சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்ததும், முதலில் தன் காதில் எந்த சொல் விழுகிறதோ, அதை வைத்து கீர்த்தனை இயற்றி, பாடி நடராஜரை துதித்து வழிப்பட்டார். அவர் பாடி முடித்ததும் தினமும் அவருக்கு நடராஜர் படிக்காசு கொடுத்தது ஆச்சரியமானது.

22. சங்க இலக்கியமான கலித் தொகையின் முதல் பாடல் சிதம்பரம் நடராஜர் துதியாக உள்ளது. எனவே சங்க காலத்துக்கு முன்பே சிதம்பரம் தலம் புகழ் பெற்றிருந்தது உறுதியாகிறது.

23. சிதம்பரம் நடராஜருக்கு சிதம்பரத்தின் பல பகுதிகளிலும் தீர்த்தங்கள் உள்ளன.

24. ஒவ்வொரு ஆலயத்துக்கும் ஒரு தல புராணத்தை சிறப்பாக சொல்வார்கள். சிதம்பரம் ஆலயத்துக்கு புலியூர் புராணம், கோவில் புராணம், சிதம்பரப் புராணம் என்று மூன்று தல புராணங்கள் உள்ளன.

25. சங்க கால தமிழர்கள் கட்டிய சிதம்பரம் ஆலயம் இப்போது இல்லை. தற்போதுள்ள ஆலயம் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு, சோழ மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்டதாகும். 26. சங்க காலத்துக்கு முன்பு சிதம்பரம் ஆலயம் கடலோரத்தில் இருந்ததாக பாடல்கள் குறிப்பின் மூலம் தெரிகிறது.

27. சிதம்பரம் தலம் உருவான போது பொன்னம்பலம் எனும் கருவறை தென் திசை நோக்கி இருந்ததாம். பல்லவ மன்னர்கள் புதிய கோவில் கட்டிய போது அதை வடதிசை நோக்கி அமைத்து விட்டதாக சொல்கிறார்கள்.

28. முகலாயர்கள், ஆங்கிலேயர்கள் படையெடுப்பின் போது சிதம்பரம் தலம் பல தடவை இடித்து நொறுக்கப்பட்டது. என்றாலும் பழமை சிறப்பு மாறாமல் சிதம்பரம் தலம் மீண்டும் எழுந்தது.

29. இத்தலத்துக்கு 'தில்லை வனம்' என்றும் ஒரு பெயர் உண்டு. புலியூர், பூலோக கைலாசம், புண்டரீகபுரம், வியாக்கிரபுரம் முதலிய வேறு பெயர்களும் உண்டு.

30. மாணிக்கவாசகர் இத்தலத்தில் தங்கி இருந்த போது, கண்டப்பத்து, குயில்பத்து, குலாபத்து, கோத்தும்பி, திருப்பூவல்லி, திருத்தோணோக்கம், திருத்தெற்றோணம், திருப்பொற்சுண்ணம், திருப்பொன்னூசல், திருவுந்தியார், அண்ணப்பத்து, கோவில் பதிகம், கோவில் மூத்த திருப்பதிகம், எண்ணப்பதிகம், ஆனந்த மாலை, திருப்படையெழுச்சி, யாத்திரைப்பத்து நூல்களை பாடினார்.

31. சிவகங்கை தீர்த்த குளம் நான்கு புறமும் நல்ல படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று தமிழகத்தில் வேறு எந்த தலத்திலும் இல்லை.

32. சிவகங்கை தீர்த்த குளம் அருகில் சிறு தூனை நட்டியுள்ளனர். அங்கியிருந்து பார்த்தால் 4 ராஜகோபுரங்களையும், ஒரு சேர தரிசனம் செய்ய முடியும்.

33. இத்தலத்து பெருமானுக்கு சபாநாயகர், கூத்த பெருமான், நடராஜர், விடங்கர், மேருவிடங்கர், தெட்சிணமேருவிடங்கர், பொன்னம்பலம், திருச் சிற்றம்பலம் என்றெல்லாம் சிறப்புப் பெயர்கள் உண்டு.

34. சிதம்பரத்தில் நடராஜர் ஆனந்த நடனம் ஆடிய இடத்தை சிற்றம்பலம் என்பார்கள். இதை சிற்சபை, சித்சபை என்றும் அழைப்பதுண்டு.

35. திருவாதிரையன்று தாமரை, செண்பகம், அத்தி போன்ற மலர்களை பயன்படுத்தி பூஜை செய்தால் நடராஜரின் முழுமையான அருளைப் பெறலாம்.

36. நடராஜருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் எப்படி வந்தது தெரியுமா? பொன்+அம்பலம்= பொன்னம்பலம். அம்பலம் என்றால் சபை. பொன்னாலாகிய சபையில் நடராஜர் ஆனந்த தாண்டவம் ஆடுவதால் அவருக்கு பொன்னம்பலம் என்ற பெயர் ஏற்பட்டது.

37. உலகில் உள்ள எல்லா சிவகலைகளும் அர்த்த ஜாமத்தில் இத்தலத்துக்கு வந்து விடுவதாக ஐதீகம். எனவே இத்தலத்தில் மட்டும் அர்த்தஜாம பூஜை தாமதமாக நடத்தப்படுகிறது.

38. சிதம்பரம் நடராஜருக்கு தினமும் 6 கால பூஜை நடத்தப்படுகிறது.

39. நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தில்தான் இப்பிரபஞ்சத்தின் இயக்கமே அமைந்துள்ளது. அண்ட சராசரங்களும் நடராஜரின் தாண்டவத்தால் இன்பம் அடைகிறதாம்.

40. மனித உடலில் இருதய பகுதி உடலின் இரு பக்க பகுதிகளை இணைப்பது போல இதயப் பகுதியாக சிதம்பரம் கோவில் உள்ளது. நடராஜ பெருமானுக்குரிய விமானம் கூட இதய வடிவில்தான் அமைந்துள்ளது.

41. சிதம்பர நடராஜரின் வடிவம் சிவசக்தி ஐக்கியமான உருவமாகும். அதாவது அர்த்த நாரீஸ்வரத்தன்மை உடைபவர் வலப்பக்கத்தில் சிவனும், இடது பக்கத்தில் சக்தியும் உறைந்துள்ளனர். எனவே அன்னை சிவகாமி இல்லாமலும் நாம் நடராஜ பெருமானை தரிசனம் செய்யலாம்.

42. சிதம்பர ரகசியம் என்று கூறப்படும் பகுதியில் வில்வத்தளம் தொங்கும் காட்சியைப் பார்த்தால் முக்தி கிடைக்கும். இதைத்தான் 'பார்க்க முக்தி தரும் தில்லை' என்கிறார்கள்.

43. சிவபெருமானுக்கும், காளிக்கும் நடந்த நடனப்போட்டி திருவாலங்காட்டில் நடந்ததாகவும், ஆனால் தில்லைக்கு சிறப்பு ஏற்படுத்த அந்த வரலாற்றை சிதம்பரத்துக்கு மாற்றி விட்டார்கள் என்றும் மூதறிஞர் அ.ச.ஞானசம்பந்தனார் குறிப்பிட்டுள்ளார்.

44. சிதம்பரத்தில் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளும் திருக்கோவில் கொண்டுள்ளனர்.

45. இத்தலத்தில் மட்டுமே ஒரே இடத்தில் நின்றபடி சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மூவரையும் தரிசனம் செய்ய முடியும்.

46. ஓம் எனும் பிரணவ மந்திரத்தின் வடிவில் இந்த ஆலயம் உள்ளது.

47. இத்தலத்தில் பொன்னம்பலம் எனப்படும் சிற்றம்பலம் மற்றும் திருமூலட்டானர் கோவில் ஆகிய 2 இடங்களில் இறைவனும், இறைவியும் எழுந்தருளி உள்ளனர்.

48. சிதம்பரத்தில் அதிகாலை தரிசனமே மிக, மிக சிறப்பு வாய்ந்தது.

49. சிதம்பரம் ஆலயத்துக்குள் நுழைந்ததும் எந்த பிரகாரத்துக்கு எப்படி செல்வது! எந்த மூர்த்தியை வழிபடுவது? என்பன போன்ற குழப்பம் ஏற்பட்டு விடும். அந்த அளவுக்கு இது பெரிய ஆலயம்.

50. மனிதரின் உடம்பும் கோவில் என்பதனை விளக்கும் வகையில் சிதம்பரம்நடராசர் கோவில் அமைந்துள்ளது. மனித உடலானது அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞான மயம், ஆனந்தமயம் என்னும் ஐந்து சுற்றுக்களைக் கொண்டது. அதற்கு ஈடாக சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.

51. நடராஜர் ஆலயமும், தில்லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலயமும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது ‘ கோவில் நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

52. நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமானின் நடனமாடும் தோற்றம் நடராஜ ராஜன் எனப்படுகிறது. இதுவே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. இக்கோவிலில்நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொரு வருடமும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

53. உலகில் பல்வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை மிகப்பெரிய பாக்கியமாகவே கருதுகின்றனர்.

54. பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவபெருமான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

55. இத்தலம் தில்லை என்னும் மரங்கள் அடர்ந்த காடாக இருந்ததால் இப்பெயர் பெற்றது. தில்லை என்னும் மரங்கள் இப்பொழுது சிதம்பரத்தில் காணக் கிடைக்கவில்லை. சிதம்பரத்திற்கு கிழக்கில் உள்ள பிச்சாவரத்திற்கு அருகே அமைந்துள்ள உப்பங்கழியின் கரைகளில் இம்மரங்கள் மிகுதியாக இருக்கின்றன.

56. சிதம்பரம் நடராஜர் கோயிலில் எட்டுத் திசைகளிலும் சாஸ்தாவின் எட்டு அவதாரங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. அந்த அவதாரங்கள் மகா சாஸ்தா, ஜகன்மோகன சாஸ்தா, பாலசாஸ்தா, கிராத சாஸ்தா, தர்மசாஸ்தா, விஷ்ணு சாஸ்தா, பிரம்ம சாஸ்தா, ருத்ர சாஸ்தா.

58. இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.

59. நடராஜருக்கும் சிவகாமசுந்தரியம்பாளுக்கும் பால், பொரி, பழம் முதலியவை நைவேத்தியம் செய்து, தீபாராதனை செய்வதை திருவனந்தல் என்றும் பால் நைவேத்தியம் என்றும் அழைக்கின்றனர். இதை பக்தர்கள் தங்களின் கட்டளையாக ஏற்று செய்யலாம்.

60. நல்லெண்ணெய், திரவிய பொடி, பால், தயிர், பழச்சாறு, இளநீர், பஞ்சாமிர்தம், சந்தனம், பன்னீர், திருநீர் ஆகியவற்றால் அபிசேகம் செய்யலாம். தவிர உலர்ந்த தூய வஸ்திரம் சாத்தலாம்.

61. அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிசேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றை செய்யலாம்.

62. இறைவன் இத்தலத்தில், நடராஜர் என்ற உருவமாகவும், ஆகாயம் என்ற அருவமாகவும், ஸ்படிக லிங்கம் என்ற அருவுருமாகவும் அருள்பாலிக்கிறார்.

63. இத்தலத்து முருகப்பெருமான் (சுப்ரமணியர்) குறித்து அருணகிரிநாதர் பத்து திருப்புகழ் பாடல்கள் பாடியுள்ளார்.

64. பெரும்பாலான பக்தர்கள், சிதம்பரம் கோயிலின் மூலவர் என்றாலே அது நடராஜர் தான் நினைத்துக் கொண்டிருப்பர். கோயிலுக்குள் நுழைந்ததும், நடராஜர் சன்னதியை தேடியே ஓடுவர். ஆனால், இத்தலத்து மூலவர் லிங்கவடிவில் ஆதிமூலநாதர் என்ற பெயரில் அருள் செய்கிறார்.

65. நந்தனார் தாழ்த்தப்பட்டவர்களை கோயிலுக்குள் வரக்கூடாது என ஒதுக்கிய காலத்திலும், சிவன் மீது கொண்ட நிஜமான பக்தியால், சர்வ மரியாதையுடன் கோயிலுக்குள் சென்று, நடராஜருடன் ஐக்கியமானார்.

66. இத்தலத்து நடராஜரைக் காண ஏராளமான வெளிநாட்டவர்கள் கூட, வருகின்றனர். அப்படிப்பட்ட அபூர்வ சிலையை, திருவிழா காலத்தில் தேரில் எடுத்து வருகிறார்கள்.

67. சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சிவகங்கை தீர்த்தக்கரையில் திருத்தொண்டத் தொகையீச்சரம் என்ற பெயரில் ஒன்பது லிங்கங்கள் உள்ளன. இந்த லிங்கங்களை ஒன்பது தொகையடியார்களாக எண்ணி வழிபடுகின்றனர்.

68. இந்த கோவில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப்பகுதி என்று கூறப்படுகின்றது.

69. பஞ்சபூத கோவில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோர்ட்டில் அதாவது சரியாக 79 டிகிரி தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது.

70. சிதம்பரம் நடராஜர் ஆடிக் கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் 'காஸ்மிக் டான்ஸ்' என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.

71. திருநீலகண்ட நாயனார் அவதரித்து வாழ்ந்தபதி இதுதான்.

72. திருப்பல்லாண்டு பாடிச் சேந்தனார் தடைப் பட்ட தேரை ஓடச் செய்த மந்திரத்தலம்.

73. நடராச சந்நிதிக்கான கொடி மரம் தங்கத்தகடு வேய்ந்ததாகும்.

74. சிதம்பரம் சிவகாமியம்மன் கோவில் முன் மண்டப விமானத்தில் சிதம்பரத் தல புராணக் காட்சிகளும் தாருகா வனத்து முனிவர்களின் செருக்கைச் சிவபெருமான் அழித்த காட்சிகள் ஓவியங்களாக இடம் பெற்றுள்ளன.

75. சென்னையில் இருந்து சுமார் 250 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று வர மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பஸ் வசதி உள்ளது.
சிவ சிவ.
சிவ சிவ.
சிவ சிவ.
சிவ சிவ.
சிவ சிவ.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...