*மகிழ்ச்சியான வாழ்வை தரும் லட்சுமி குபேர பூஜை !!*
ஒருவரது வீட்டில் செல்வம் அதிகரிக்கவும், சேர்ந்த செல்வம் குறையாமல் இருக்கவும் செய்யவேண்டிய மிகச்சிறந்த பூஜை லட்சுமி குபேர பூஜை. இப்பூஜையின் மூலம் செல்வத்திற்கு அதிபதியான குபேரனின் அருள் மட்டுமில்லாமல் மகாலட்சுமியின் அருளையும் பெற முடியும்.
குபேர லட்சுமி பூஜையை செய்வது மிகவும் எளிது. ஆனால், இதன் மூலம் கிடைக்கும் பலன்களோ மிக அதிகம். இந்த பூஜையை செய்ய நாம் சரியான நாளை தேர்ந்தெடுக்க வேண்டும். இப்பூஜையை ஒன்பது வாரம் அல்லது ஒன்பது மாதம் தொடர்ந்து ஒரே நாளில் செய்யவேண்டும். ஒன்பது வாரம் பூஜை செய்ய நினைப்பவர்கள் வாரம்தோறும் வரும் வெள்ளிக்கிழமையன்று இப்பூஜையை செய்யலாம்.
அதேபோல் ஒன்பது மாதம் செய்ய நினைப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமியன்று இப்பூஜையை செய்யலாம். இப்பூஜையை ஒருவர் மட்டுமே தொடர்ந்து செய்ய வேண்டும். அவரால் முடியாத பட்சத்தில் அதே குடும்பத்தை சேர்ந்த வேறொருவர் செய்யலாம்.
*லட்சுமி குபேர பூஜை செய்யும் முறை :*
வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி தினத்தில், அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, பூஜையறையில் குலதெய்வத்தை மனதார வேண்டி தீபம் ஏற்ற வேண்டும். பின்பு, இதற்கு அடுத்து செய்யும் பூஜைகள் தடைபடாமல் இருக்கவும், குறைவில்லா செல்வம் கிடைக்கவும் விநாயகரை வணங்கிக்கொள்ளவும்.
குபேர யந்திர கோலத்தில் உள்ள கட்டத்தை குங்குமத்தாலும், எண்களை அரிசிமாவாலும் எழுதுவது சிறந்தது. திருமகளான லட்சுமியை குறிக்கும் விதமாக எழுதப்பட்டுள்ள 'ஸ்ரீ" எனும் எழுத்தை மஞ்சள் பொடியால் எழுதலாம். இதை வரைந்த பிறகு கட்டங்களின் உள்ளே எண்களுக்கு பக்கத்தில் ஒரு நாணயம் வைக்க வேண்டும். நாணயத்தை கட்டத்திலுள்ள எண்களை மறைப்பதுபோல் வைக்கக்கூடாது.
நாணயம் மகாலட்சுமியின் அடையாளம் என்பதால் குபேர யந்திரத்தில் திருமகள் எழுந்தருளியிருப்பதாக ஐதீகம். பூஜை செய்வதற்கு உதிரிப்பூக்களை வைத்துக் கொள்ளவும். வரைந்துள்ள பலகையை பூஜையறையில் வைத்து பின்பு அதற்கு முன்பு ஒரு தீபம் ஏற்றி, பால் அல்லது பாயாசம் சமைத்து படைக்கலாம்.
பூஜையை செய்திட ஒருமுறைக்கு 9 காசுகள் என, 9 தடவைக்குமாகச் சேர்த்து 81 நாணயங்கள் அவசியம். 1 ரூபாய் முதல் உங்கள் வசதிக்கு ஏற்ப காசைப் பயன்படுத்தலாம். இதில் முக்கியமான விஷயம் 81 காசுகளும் சம மதிப்பு உடையவையாக இருக்க வேண்டும்.
பிறகு லட்சுமி மற்றும் குபேரருக்கு உரிய மந்திரங்களை கூறியவாறே சிறிதளவு பூவை எடுத்து நீங்கள் வரைந்திருக்கும் குபேர யந்திரத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் போட்டு மனதார வழிபட்டு பூஜையை முடித்துக்கொள்ளலாம்.
ஒன்பது வாரமோ அல்லது ஒன்பது மாதமோ குபேர யந்திரத்தில் வைத்த நாணயங்களை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை அல்லது பௌர்ணமி நாட்களில் சிவன் கோவிலில் உள்ள உண்டியலில் போட்டுவிட வேண்டும்.
இந்த பூஜையை செய்வதால் வீட்டில் நிச்சயம் பணத்தட்டுப்பாடு நீங்கி செல்வம் பெருகும். அதோடு வீட்டில் நிம்மதியும், சந்தோஷமும் நிலைக்கும்.