சிவன் சொத்து குல நாசம்..! டி.எஸ்.பி கைது
Nov 15, 2018 8:52 PM Polimer news
நெல்லை மாவட்டம் பழவூர் நாறும் பூநாதர் கோவிலில் 24 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 சாமி சிலைகளை திருடி வெளி நாட்டிற்கு கடத்திய விவகாரத்தில் வெளிநாட்டு குற்றவாளிகளை தப்பவிட்ட டி.எஸ்.பி ஜீவானந்தம் என்பவரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
நெல்லை மாவட்டம் பழவூரில் பழமையான நாறும் பூநாதர் கோவிலில் இருந்து கடந்த 2005 ஆம் ஆண்டு 13 சாமி சிலைகள் திருடப்பட்டன. 24 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த சிலை திருட்டு வழக்கை முதலில் அப்போதைய சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் ஜீவானந்தம் விசாரித்தார்.
சென்னை ஆழவார்பேட்டையில் உள்ள சிலைக்கடத்தல் மன்னன் தீனதயாளன் வீட்டில் இருந்து 4 சிலைகளை மீட்டதாக கூறி நீதிமன்றத்தில் ஒப்படைத்த காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், இந்த வழக்கில் பல் உண்மைகளை மறைத்ததோடு தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை தப்பவிட்டதாகவும் மீது புகார் எழுந்தது.
இதையடுத்து நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு தடை பெற்ற, நிறுத்திய சிலைகடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல், இந்த சிலைகடத்தல் குறித்து பல திடுக்கிடும் உண்மைகளை கண்டறிந்தார்.
சிலைகள் களவு போவதற்கு முன்பாக அமெரிக்காவின் நியூயார்க்கில் அருங்காட்சியம் நடத்திவரும் சுபாஷ் சந்திர கபூர் கோவிலில் சாமி தரிசனம் செய்வது போல நாரும் பூநாதர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்த அர்ச்சகரின் தட்டில் 1000 ரூபாய் போட்டு விட்டு கோவிலில் உள்ள சிலைகளை புகைபடம் எடுத்து வந்துள்ளார். அந்தபுகைபடங்களையும், 50 லட்சம் ரூபாய் பணத்தையும் கொடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள சிலைகடத்தல் மன்னன் தீனதயாளனிடம் அந்த சிலைகளை கடத்தி அனுப்பி வைக்கும்படி கூறி உள்ளார்.
அதன்படி தீனதயாளனிடம் பணத்தை பெற்றுக் கொண்ட கொள்ளையர்கள் நாறும் பூநாதர் கோவிலின் பூட்டை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். கோவிலில் உள்ள தொன்மையும், பழமையும் வாய்ந்த ஆனந்த நடராஜர், ஆவூடையம்மாள், மாணிக்க வாசகர், காரைக்காலம்மையார் சிலை உள்ளிட்ட 13 சிலைகளை சிலை கடத்தல் கும்பல் திருடி கடத்தி சென்றுள்ளது.
அருப்புக்கோட்டையில் வைத்து ஆனந்த நடராஜர் மற்றும் ஆவூடையம்மான் சிலைகளை தங்கம் என நினைத்து சிலைகளின் கை பகுதியை அறுத்து சோதித்த போது, அது தங்கம் இல்லை என்பது தெரியவந்துள்ளது. பின்னர் சிலைகள் அங்கிருந்து கண்டம் கோட்டை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 4 சிலைகளில் அமிலங்கள் ஊற்றி சோதித்த போது உருக்குலைந்து விட்டன.
இந்த நிலையில் சென்னை கொண்டு வரப்பட்டு தீனதயாளனிடம் ஒப்படைக்கப்பட்ட ஆனந்த நடராஜர் சிலை உள்ளிட்ட 4 சிலைகளை மட்டும் மும்ப்பையில் உள்ள இந்தோ நேபாள் ஆர்ட் கேலரி மூலம் கலைபொருட்கள் என்ற பெயரில் ஹாங்காங் அனுப்பி அங்கிருந்து லண்டன் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
அங்கு நீல்ஸ்பெரி ஸ்மித் என்ற சிற்பி 2 கோடி ரூபாய் பணம் பெற்றுக் கொண்டு ஆனந்த நடராஜர் சிலைக்கும், ஆவுடையம்மாள் சிலைக்கும் புதிதாக கை செய்து ஒட்டவைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள சுபாஷ் கபூரின் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனை தனக்கு கிடைத்த பெருமையாக நினைத்து அருங்காட்சியகத்தின் அட்டவணை புத்தகத்தின் முகப்பில் இந்த சிலைகளின் படத்தை போட்டு விற்பனைக்கு தயாராக இருப்பதாக விளம்பரம் செய்துள்ளார் கபூர்..!
தீனதயாளன் மூலமாக சிலை கடத்தப்பட்ட தகவல் தெரிந்த நிலையில் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம், அவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, தீனதயாளனிடம் பணத்தை பெற்றுக் கொண்டு சிலை திருட்டு வழக்கை மிகவும் மெத்தனமாக விசாரித்துள்ளார். ஒரு கட்டத்தில் சிலைகடத்தல் காவல் அதிகாரிகள் அதிக அளவு பனம் கேட்டு மிரட்டியதால் , பாங்காக் சென்ர தீனதாயாளன் , சுபாஷ் கபூருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்றில் தங்கி தன்னுடைய நெருக்கடி நிலை குறித்து விளக்கி உள்ளார்.
மேலும் இந்த 4 சிலைகளுக்கு பதிலாக இரண்டு தொண்மையான ஓவியங்களை கொடுத்து சிலைகளை விமானம் மூலம் நேபாளம் கொண்டு வந்து, அங்கிருந்து கொல்கத்தா வழியாக சென்னைக்கு லாரியில் ஏற்றி தீனதயாளன் மீட்டு வந்தது உள்ளிட்ட எந்த தகவலையும் நீதிமன்றத்துக்கு தெரிவிக்காமல் ஏமாற்றி உள்ளார் காவல் ஆய்வாளர் ஜீவானந்தம்.
அதோடில்லாமல் முக்கிய குற்றவாளியான சுபாஷ் கபூர். வல்லபபிரகாஷ், ஆதித்ய பிரகாஷ் உள்ளிட்டோரை தப்பவிட்டதும், கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது திருச்சி மாவட்ட மதுவிலக்கு அமலாக்கபிரிவு டி.எஸ்.பியாக பனிபுரிந்து வந்த ஜீவானந்தத்தை சிலை கடத்தல் காவல்துறையினர் கைது செய்தனர்.
அவரை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுவரை இந்த வழக்கு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சில காவல்துறை அதிகாரிகளும் இந்த வழக்கில் சிக்க இருப்பதால் முன்பு சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் ஏற்கனவே பணியாற்றி ஓய்வு பெற்ற பலர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிவன் சொத்து குல நாசம் என்பது போல இந்த சிலை திருட்டில் ஈடுபட்டவர்கள் ஒவ்வொருவராக போலீசில் சிக்கி வருவது குறிப்பிடதக்கது.!