Thursday, 22 November 2018

*கோவிலுக்குள் போங்க...* *என்பதல்ல எங்கள் வேலை!*

*கோவிலுக்குள் போங்க...*
*என்பதல்ல எங்கள் வேலை!*

                                        *பினராயிவிஜயன்*
  கேரள முதல் அமைச்சர்

கோவிலுக்குள் நுழையுங்கள் என்று நாங்கள் எந்தப் பெண்களையும் கேட்டுக் கொள்ளவில்லை; எங்கள் கடமை... கோவிலுக்குச் செல்பவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது என்பதுதான்.
••
கேரளாவில் சங் பரிவாரக்கூட்டத்தினர் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக இன்றைய 18.11.18 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேட்டில்...
••
??கேள்வி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் எதிர்காலத்திற்கே இடர் ஏற்படக்கூடிய விதத்தில், சபரிமலை பிரச்சனையில் ஒரு முரட்டுத்தனமான நிலைப்பாட்டினை நீங்கள் எடுத்திருப்பதுபோல் தோன்றுகிறதே!

*எதிர்ப்பவர்கள் ஆதரித்தவர்களே...*
√√பினராயி விஜயன்: இப்போது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை எதிர்ப்பவர்கள் எல்லோருமே, அவ்வாறு தீர்ப்பு வரும் வரையிலும், பெண்கள் கோவிலுக்குள் செல்வதை ஆதரித்துக் கொண்டிருந்தவர்கள்தான். ஏன், தீர்ப்பு வந்தபின்பும்கூட, உடனடியாக அதனை வரவேற்றவர்கள்தான்.

இது ஒரு வரலாறு படைத்திடும் தீர்ப்பு என்று காங்கிரஸ் கூறியது. ஆர்எஸ்எஸ்-உம் கூட அதனை ஆதரித்தது.

எப்போதெல்லாம் சமூக சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகிறதோ அப்போதெல்லாம் சமூகத்தில் உள்ள பிற்போக்குப் பிரிவினர் அதனை எதிர்த்திடுவார்கள்தான்.

துரதிர்ஷ்டவசமாக, இப்போது இந்த அரசியல் கட்சிகளும்கூட அவர்களுடன் சேர்ந்துக் கொண்டிருக்கின்றன.

ஒரு மாநில அரசு என்கிற முறையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதைத் தவிர வேறு வழியில்லை.

*அன்றும் அன்றும் கோர்ட் தீர்ப்பைத்தான் அமலாக்குகிறோம்!*
1991இல் கேரள உயர்நீதிமன்றம், சபரிமலைக்கு 10 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட வயதில் உள்ள பெண்கள் நுழைவதற்குத் தடை விதித்துத் தீர்ப்பளித்திருந்தது. அனைத்து அரசாங்கங்களும் அதற்குக் கட்டுப்பட்டு நடந்துக்கொண்டன.

1996, 2006 மற்றும் 2016இல் இருந்த இடது ஜனநாயக முன்னணி அரசாங்கங்களும் அவ்வாறே செய்தன.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரையிலும் அவ்வாறுதான் இங்கிருந்த அரசாங்கங்கள் நடந்துகொண்டன.

??கேள்வி: இந்த வழக்கு எப்படி உருவானது?

*மனுதாரர் அதிகமானோர் ஆர்எஸ்எஸ்*
√√பினராயி விஜயன்: சபரிமலைக் கோவிலுக்கு அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி 2006ஆம் ஆண்டில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அப்போது அந்த வழக்கைத் தாக்கல் செய்த வழக்கின் மனுதாரர் தலைமையிலான இந்திய இளம் வழக்குரைஞர்கள் சங்கத்தில் இருந்த வழக்குரைஞர்களில் பெரும் பானலானவர்கள் ஆர்எஸ்எஸ்-ஐச் சேர்ந்தவர்களாவார்கள்.

வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில், கேரள அரசாங்கம் முக்கியமான சில பரிந்துரைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

*பாலின சமத்துவமே எமதானது...*
அதில் முக்கியமான ஒன்று, நாங்கள் பாலின சமத்துவ உரிமைகளுக்காக நிற்கின்றோம். ஆயினும் இது மத நம்பிக்கையின் அடிப்படையிலான விஷயமாக இருப்பதால் அதனைக் கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்து தர்மசாஸ்திரத்தில் அறிவுள்ளவர்களைக் கொண்டு ஓர் ஆணையம் அமைத்திட வேண்டும் என்கிற முன்மொழிவினைச் செய்திருந்தோம்.

இது, 2007இல் நாங்கள் தாக்கல் செய்த உறுதி வாக்குமூலத்தின் ஒரு பகுதியாகும்.

மேலும் இது தொடர்பாக அரசாங்கம் சட்டமியற்ற வேண்டும் என்பது போன்று எந்தத் திட்டத்தையும் பெற்றிருக்க வில்லை என்றும், நீதிமன்றம் சொல்கிற கட்டளையைப் பின்பற்றுவோம் என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

மேலும், இந்த வழக்கிற்காக சுமார் 100 வழக்குரைஞர்கள் ஆஜராகி இருந்தார்கள். ஆனால், அவர்களில் ஒருசிலர் மட்டும்தான் பெண்கள் கோவிலுக்குள் நுழைவதற்கு எதிராக வாதிட்டார்கள்.

பெரும்பாலானவர்கள் பெண்கள் கோவிலுக்குள் நுழைவதை ஆதரித்தார்கள்.

??கேள்வி: நீதிமன்றத்தின் உத்தரவால் மிகவும் நிலைகுலைந்துபோயுள்ள கடவுள் நம்பிக்கையாளர்கள் அந்நியமாவதைத் தடுக்கும் விதத்தில்,  மாற்று வழிகள் குறித்து அரசாங்கம் ஆய்வுகள் மேற்கொண்டதா?

*நாங்கள் தவறேதும் செய்யவில்லை*
√√பினராயி விஜயன்: நீதிமன்ற உத்தரவு இருக்குமாயின், அதனை அமல்படுத்துவதுதான் அரசாங்கத்தின் கடமையாகும்.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவிற்கிணங்க பெண்கள் சபரிமலைக்கு வருவார்களானால், எங்கள் கடமை என்பது அவர்கள் கோவிலுக்குச் செல்வதற்கு தேவஸ்வம் போர்டுடன் இணைந்து வசதி செய்து கொடுப்பது என்பதேயாகும்.

துரதிர்ஷ்டவசமாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவை இங்கே சிலர் வெளிப்படையாகவே எதிர்க்கிறார்கள். ஆனால், இதில் விநோதமான விஷயம் என்னவென்றால், இவர்கள் பழி சுமத்துவது நீதிமன்றத்தை அல்ல, மாறாக நம்மைத்தான்.

இந்த அரசாங்கத்தைத்தான் குறிவைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். மாநில அரசாங்கம் சில தவறுகள் செய்துவிட்டதுபோல் சித்தரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

*ஜனநாயகத்தில் வேறுவழியில்லை*
ஒரு ஜனநாயக நாட்டில், நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்துவதைத் தவிர அரசாங்கத்திற்கு வேறு வழியில்லை.

சபரிமலைக்குள் நுழைவதற்கு பெண்களை நாங்கள் ஒன்றும் கேட்டுக்கொள்ளவில்லை. சபரிமலைக்கு வாருங்கள் என்று பெண்களை நாங்கள் ஒன்றும் அணிதிரட்டிடவில்லை.

எங்கள் கடமை என்னவென்றால், அவ்வாறு வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது என்பதுதான்.

ஆனால் என்ன நடக்கிறது இங்கே? பக்தர்கள் தாக்கப்பட்டார்கள். பெண்கள் கோவிலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக ஒரு இளைஞர் பட்டாளத்தைத் தயார் நிலையில் வைத்திருப்பதாக ஒரு தலைவர் வெளிப்படையாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்.  

உச்சநீதிமன்றம் நாளையே தன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமானால், நாங்களும் அதற்குக் கட்டுப்பட்டுத்தான் ஆகவேண்டும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாங்கள் போக முடியாது.

??கேள்வி: ஆனால் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக சமூகத்தில் மக்கள் மத்தியில் ஓர் ஆழமான பிரிவினைக்கு இட்டுச்செல்லும்போல் தோன்றுகிறதே!

*மதசார்பின்மையேகேரள மனோபாவம்*
√√பினராயி விஜயன்: நான் அதனை வேறுவிதமாகப் பார்க்கிறேன். கேரளாவின் மதச்சார்பின்மை மனோபாவம் என்பது, கேரளாவில் நீண்ட நெடுங்காலமாக நடைபெற்று வந்த சீர்திருத்தங்கள் மற்றும் மறுமலர்ச்சி மூலமாக உருவானதாகும்.

நீண்ட காலமாக நிலவிவரும் இத்தகைய அமைதியான சூழலை அழித்து ஒழித்துவிட வேண்டும் என்று சங் பரிவாரக் கூடாரம் முயற்சித்துக் கொண்டிருக்கிறது. சபரிமலையை அதற்குப் பயன்படுத்திக்கொள்ளப் பார்க்கிறார்கள்.

இத்தீர்ப்பானது, நம்பிக்கையாளர்களில் சிலரின் மத்தியில் சில புரிதலின்மையை ஏற்படுத்தி இருக்கலாம். எனினும், இது தற்காலிகமானதேயாகும்.

கேரளாவின் மதச்சார்பின்மை மனோபாவம் இதனை மிக எளிதாக சமாளித்திடும். மதவெறி சக்திகளால் அதனை ஒன்றும் செய்துவிட முடியாது. நல்லது நடக்கும் என்றே நான் நம்புகிறேன். 

*நன்றி: தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-18.11.18.*
தமிழில்: *சவீரமணி...*

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...