#NewsTN
#பாரதத்தின்_எதிர்காலம் –
#RSS பார்வையில்
Thu Sep 20 2018
“பாரதத்தின் எதிர்காலம் – ஆர்.எஸ்.எஸ் பார்வையில்...” என்ற தலைப்பில் தலைநகர் தில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் மூன்று நாட்கள் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அகில பாரத தலைவர், ஸ்ரீ.மோகன் பாகவத் அவர்கள் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து உரையாற்றினார். நேற்று “தேசத்திற்காக உழைக்க வாருங்கள்” என்று சமூகத்திற்கு அழைப்பு விடுத்து கருத்தரங்கை அவர் நிறைவு செய்தார். அவரது உரையிலிருந்து சில முக்கியமான பகுதிகள் இங்கு தமிழில் தரப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.எஸ் மக்களை நல்ல பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்கும் நோக்கத்தோடு வேலை செய்துவருகிறது. இந்த மூன்று நாட்களில் நான் சொன்ன எல்லாவற்றையும் நீங்கள் நம்பாவிட்டாலும் கூட, நீங்கள் சங்கத்தை புரிந்துக்கொண்டுவிட்டால், நீங்களும் சங்கத்தில் இணைந்து விடுவீர்கள் என்று நான் நம்புகிறேன்.
இட ஒதுக்கீடு
இந்திய அரசியல் சாசனம் இட ஒதுக்கீட்டை அளித்திருப்பதால் அதை நாங்கள் ஆதரிக்கிறோம். இப்போது இட ஒதுக்கீட்டினால் பயன் பெற்று வரும் சமுதாயங்கள், தங்களுக்கு இனி இட ஒதுக்கீடு தேவையில்லை என்று உணரும் வரை இந்த இட ஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும்.
சில நூற்றாண்டுகளாக நம் சமுதாயத்தில் ஏற்பட்டுவிட்ட ஏற்றத்தாழ்வுகளை நீக்கவே இட ஒதுக்கீட்டு முறை உள்ளது. அதனால், சமுதாயத்தில் சமநிலை ஏற்பட நாம் இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இங்கு இட ஒதுக்கீடு பிரச்சனையல்ல. இட ஒதுக்கீட்டு அரசியலே பிரச்சனை.
சாதி முறைகளும் கலப்பு திருமணங்களும்
சமூகத்தில் சமநிலையை ஏற்படுத்தும் கலப்பு திருமணத்தை சங்கம் ஆதரிக்கிறது. இன்னும் சொல்லப்போனால், சங்க ஸ்வயம்சேவகர்கள் தான் இந்தியாவிலேயே அதிகமான சதவிகிதத்தில் கலப்பு திருமணம் புரிந்தவர்களாக இருக்கிறார்கள்.
எஸ்.சி/எஸ்.டி சர்ச்சை
சாதியின் பெயரால் பழிவாங்கப்படுதல் என்பது நமது சமூகத்தில் இருப்பதை மறுக்க முடியாது. இவ்விதமான பழிவாங்கப்படுதலில் இருந்து மக்களை காப்பாற்ற உரிய சட்டங்கள் இயற்றப்படுதலும் அவை சரியாக நடைமுறைப்படுத்தப்படுதலும் வேண்டும். அதே சமயத்தில் இந்த சட்டங்கள் துஷ்பிரயோகம் செய்யப்படாமல் இருப்பதையும், தவறாக பயன்படுத்தபடாமல் இருப்பதையும் நாம் உறுதிசெய்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், துரதிர்ஷ்டவசமாக இன்று இவை நடக்கத்தான் செய்கின்றன.
ராமர் கோவில்
ராமருக்கு அவர் பிறந்த இடமான அயோத்யா ராம ஜன்ம பூமியில் ஒரு பிரம்மாண்டமான திருக்கோவில் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கட்டப்பட வேண்டும். எத்தனையோ மதங்களை சார்ந்த எத்தனையோ சமூகத்தினர் ஸ்ரீராமரை தங்கள் தலைவனாக ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே, பகவான் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் அவருக்கு கோவில் கட்டுவது தான் சரியானதாக இருக்கும்.
ராமர் கோவில் கட்டுவதன் மூலம் ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே உள்ள உரசல்கள் முடிவுக்கு வரும். அதோடு இந்த விஷயம் சமாதானமாக தீர்க்கப்படும் போது பிரச்சனைக்கு காரணமானவர்கள் என்று முஸ்லீம் சமூகத்தை நோக்கி சுட்டும் விரல்கள் தானாவே மடங்கிவிடும்.
நோட்டா
எந்த ஜனநாயக முறையிலும் நூறு சதவிகிதம் பொருத்தமான தேர்வு என்பது சாத்தியமில்லை. இருப்பதற்குள் சரியானவரையே தேர்ந்தெடுக்க முடியும். மகாபாரத காலத்திலிருந்தே மனித இயற்கை அப்படித்தான் இருக்கிறது. பாண்டவர்கள் கவுரவர்கள் இடையே யாரை ஆதரிப்பது என்ற விவாதம் யாதவர்களிடையே எழுந்த போது ஒரு சாரார், பாண்டவர்களையும், மற்றொரு சாரார் கவுரவர்களையும் ஆதரித்தனர். ஏனென்றால் பாண்டவர்களும் தவறுகள் செய்திருந்தனர். அப்போது ஸ்ரீகிருஷ்ணர் தலையிட்டு முழுமையான நல்லவர்கள் என்று எவருமேயில்லை, எனவே இருப்பவர்களுக்குள் சிறந்தவரைத்தான் தேர்ந்தெடுத்தாக வேண்டும் என்று கூறினார். அதே தான் இன்றளவும் உண்மையாக உள்ளது.
எனவே, நாம் நோட்டாவை தேர்ந்தெடுப்பது சரியானதாக இருக்காது. நாம் இருப்பவர்களில் சரியானவரை தேர்ந்தெடுக்காவிட்டால், அது இருப்பவர்களிலேயே மோசமானவர்களுக்கு சாதகமாகப் போய்விடும்.
ஜனத்தொகை கொள்கை
ஜனத்தொகை குறித்த ஒரு விரிவான சமச்சீரான கொள்கை உருவாக்கப்பட வேண்டும். கொள்கை வகுப்பாளர்கள், இன்னும் ஐம்பது வருடங்களுக்கு பின் வரப்போவதையும் தொலை நோக்கோடு சிந்தித்து அதற்கேற்ற படி திட்டங்களை வகுக்க வேண்டும். ஒரு முறை கொள்கைகள் தீர்மானிக்கப்பட்டுவிட்டால் அது எல்லா சமூகத்தினருக்கும் பொருந்தக்கூடியதாய் இருக்க வேண்டும். எங்கெல்லாம் நிலைமை மிகவும் சிக்கலாக உள்ளதோ அங்கெல்லாம் இந்த கொள்கைகள் முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தப்பட வேண்டும்.
ஹிந்து கொண்டாட்டங்களினால் ஏற்படும் “மாசு”
சுற்றுசூழலும், மாசுகட்டுப்பாடும் முக்கியமான தேசிய பிரச்னைகள். எனவே, எல்லா சமூகத்தினரும் அதன் தேவையை உணர்ந்து தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களின் போது பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ளவேண்டும். இது எல்லா சமூகத்தினருக்கும் பொருந்தும். ஆனால், ஹிந்துக்களின் பண்டிகை கொண்டாட்டங்கள் மட்டும் தேர்ந்த்தெடுக்கப்பட்டு மாசு கட்டுப்பாட்டின் பெயரால் ஒடுக்கப்படுவது ஏன்? ஹிந்து கலாசாரமானது காலங்களுக்கேற்றார் போல் பரிணாம வளர்ச்சியடைந்து வருகிறது. எனவே, சுற்றுசூழலை பாதிக்கும் விஷயங்களை நீங்கி காலத்திற்கேற்ப மாற தயாராக இருக்கிறது. ஆனால், இது எல்லோருக்கும் பொருந்தும் என்பதை உணரவேண்டும்.
மத மாற்றம்
“எல்லா மதங்களும் ஒன்று தான்” என்று எல்லோரும் கூறிவருகிறார்கள். அப்படியேனும் போது, மத மாற்றத்திற்கு என்ன தேவை? மத மாற்றத்தை ஊக்குவிப்பவர்கள் ஆன்மீகத்தை ஊக்குவிக்கவில்லை. அவர்களது நோக்கம் தீய எண்ணத்துடனானது. எனது தனிப்பட்ட நம்பிக்கைகளே எனது தனிச்சிறப்பாகும். மதங்கள் கடைச்சரக்காக கூடாது. தங்கள் சுய தீர்மானங்களால் வேறு மதங்களுக்கு செல்பவர்களை நாம் மதிக்கிறோம். ஆனால், மத மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன என்பது நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும். கட்டாய மத மாற்றத்திற்காக பணம் கைமாறுமேயானால் நாங்கள் அதற்கு எதிராக குரல் கொடுப்போம்.
No comments:
Post a Comment