Saturday, 10 November 2018

இதோ 2019 வரப்போகிறது. அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

இதோ 2019 வரப்போகிறது. அடுத்த பிரதமரை தேர்ந்தெடுக்கும் கடமை நமக்கு இருக்கிறது.

யாரை தேர்ந்தெடுப்பது? அது உங்கள் விருப்பம் .. ஆனால் நான் யாரை தேர்ந்தெடுக்க போகிறேன் எதற்காக இந்த முடிவெடுத்தேன்.

IIT, IIM, CA என்று படிக்கவில்லையென்றாலும் நானும் ஏதோ படித்தவன்தான். பொருளாதாரத்திலும், அரசியலிலும் சிறிது ஞானம் உள்ளவன்தான். இதையெல்லாம் தாண்டி இந்தியன் என்ற உணர்வு அதிகமுள்ளவன். அதனால் என்னாலேயே  இந்த முக்கியமான முடிவை எடுக்க முடியும் என்று நினைக்கிறேன்.

என்னை பொறுத்தவரை  பொருளாதாரம், கட்டுமானம் , வெளியுறவு கொள்கை, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, ஊழல் மற்றும் கறுப்புப்பணம் எதிர்ப்பு,   தவிர .... மோடி இல்லாவிட்டால் வேறு யார் என்ற 7 கேள்விகள் எனது மனதிற்குள் எழுந்து அதற்கான விடைகள் எனது முடிவை எடுக்க உதவியது.

பொருளாதாரம் :

மிகவும் பின்னால் போகவேண்டாம் 2004 - 2014 வருடத்திய பொருளாதார வளர்ச்சியும் 2014-18 இப்பொழுது உள்ள பொருளாதார வளர்ச்சியையும் பார்த்தாலே எந்த ஆட்சியில் பொருளாதாரம் நன்றாக வளர்ந்து இருக்கிறது என்று தெரிந்துவிடும்.

சென்ற UPA ஆட்சியில் 10 வருடங்களில் பொருளாதாரத்தில் பல முன்னேற்றங்களை கொண்டு வந்திருக்கலாம். GST , IBC (Insolvency and Bankruptcy Code ) போன்றவற்றை கொண்டு வந்திருந்தால் இந்நேரம் நமது பொருளாதாரம் இன்னும் நன்றாக வளர்ந்திருக்கும். ஆனால் டெல்லியில் கோலோச்சிக்கொண்டிருந்த லூட்டியங்களும் , கூட்டணிக்கட்சிகளும் எழுத்த இழுப்புக்கெல்லாம் சென்ற அரசாக தான் இருந்தது சென்ற UPA அரசு. மன்மோகன் சிங்கிற்கு தெரியாத பொருளாதாரமா? ஆனால் அவரால் எந்த முடிவையும் எடுக்க முடியவில்லையே. முடிவு எடுக்கும் அதிகாரம் சோனியா குடும்பத்தினரிடமும், அநத குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்த பா சிதம்பரம் போன்றவர்களிடம் தானே இருந்தது. அவர்கள் கொள்ளையடிப்பதில் தானே முழுநேரமும் செலவிட்டார்கள்.

GST யை அமல் படுத்த நேரம் முடிவு செய்து அந்த நேரத்தில் அமல் படுத்திய இந்த அரசை பாராட்டியே ஆகவேண்டும். சிறு சிறு பிரச்சனைகளும் உடனடியாக தீர்க்கப்பட்டு வரி வசூலில் சாதனை செய்துகொண்டிருக்கிறார்கள். மறைமுக வரிகள் நீக்கப்பட்டதால் , ஊழல் குறைந்து வணிகர்கள் தாங்களாகவே வரி தாக்கல் செய்ய வைத்துள்ளது இந்த அரசு.

வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு ஏமாற்றுபவர்களை கிடுக்கி பிடி போட்டு வசூல் செய்ய வகை செய்யும் IBC மசோதா / சட்டம் .. ஏமாற்றவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு சிம்ம சொப்பனம்.

கிட்டத்தட்ட 30 கோடி மக்களுக்கு வங்கி கணக்கு ஆரம்பித்துக்கொடுத்து மானியத்தை அதில் நேரடியாக செலுத்தி ஊழல் எதுவும் நடைபெறாமல் தடுத்ததோடு மட்டுமில்லாமல் பல  ஆயிரம் கோடி ரூபாய்கள் சேமித்து இருக்கிறது.

இதையெல்லாம் விட சென்ற அரசு குப்பையாக மாற்றி வைத்த பொருளாதாரத்தையும் அதிகரித்துகொன்டே சென்று கொண்டிருந்த நிதி பற்றாக்குறையையும், பணவீக்கத்தையும் கட்டுக்குள் கொண்டுவந்து, ஊழல் மற்றும் செயல் இழந்த சென்ற UPA அரசு மீது நம்பிக்கையில்லாததால் முதலீடு செய்ய அயல்நாட்டு நிறுவனங்கள் தயங்கியதால் அதல பாதாளத்திற்கு சென்ற அந்நிய முதலீடு இந்த அரசின் செயல்பாட்டில் திருப்தியடைந்து இந்தியாவில் முதலீடு செய்ய ஆரம்பித்ததால்  , இதுவரை இல்லாத அளவிற்கு வெளிநாட்டு முதலீடு அதிகரித்துள்ளது.

எல்லோருக்கும் தெரிந்திருக்கும் .. இந்தியாவில் ஒரு சொத்து வாங்கவேண்டும் என்றால் அதன் விலை மூன்று பாகங்களாக பிரிக்கப்படும். 1. அந்த நிலத்தின் உண்மையான மதிப்பு 2. பதிவு கட்டணம் 3. கருப்பு பணம்

3 வது குறிப்பிட்ட காரணத்தினால்  ஒரு நிலத்தின் மதிப்பு அதன் உண்மையான மதிப்பை விட பல மடங்கு அதிகரித்தே இருந்துவந்தது. அது இப்பொழுது பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டு நிலத்தின் உண்மையான மதிப்பில் சொத்து வாங்க முடிவதால் சாமான்யனும்  வீடு நிலங்களில் வாங்க முடிகிறது.

இது எப்படி சாத்தியமாயிற்று ? இதற்க்கு முக்கிய காரணம் டெமோனிடைசேஷன். இன்னும் எதிர்க்கட்சிகளும், NGO க்களும் டெமோனிடைசேஷனை பற்றி குற்றம் சாரி வந்தாலும் கேலி செய்து வந்தாலும்,சாமானிய மக்கள் அதை ஆதரிக்கவே செய்கின்றனர்.

சென்ற UPA அரசில் வங்கிகள் வரைமுறை இல்லாமல் சரியான கோலேட்ரல் இல்லாமல் அரசியல் தலையீட்டாலும் அழுத்தத்தினாலும்  பலருக்கு கடன் கொடுத்ததினால் வராக்கடன் எல்லை மீறி போனது.. இந்த அரசு முடிந்த வரை அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்து கொண்டிருப்பதோடு மட்டுமில்லாமல் வங்கிகள்  கடன் கொடுப்பதை சீரமைத்துள்ளது. இனி மேல் இது போன்று ஏமாற்றுவது மிகவும் கடினம்.

தடுப்பு மற்றும் சரி செய்யும் நடவடிக்கை 11 அரசு வங்கிகளில் எடுத்துவருகிறது இது மேலும் 6 வங்கிகளுக்கு விரிவாக்கப்படும்.

கடனை திருப்பி காட்டாமல் ஓடிப்போனவர்களை இந்தியாவிற்கு திருப்பி கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

அமெரிக்காவின் வீண் ஜம்பத்தால் பல்வேறு நாடுகளின் டாலருக்கு நிகரான அவர்களது பணத்தின் மதிப்பு குறைந்தது. இந்திய ரூபாயின் மதிப்பும் குறைந்தது. வரலாறு காணாத வீழ்ச்சி. கச்சா எண்னை விலை அதிகரித்தது. அதனால் இங்கும் பெட்ரோல் டீசல் விலை அதிகரித்தது. வரலாறு காணாத ஏற்றம்.. இருந்தாலும் பெட்ரோலிய பொருட்களின் விலை ஏற்றத்தால் வேறு எந்த பொருட்களின் விலையும்  ஏறவில்லை. பதுக்கல் காரர்களை ஒடுக்கியதால் டெமோனிடைசேஷனால் பல பதுக்கல்காரர்கள் பணத்தை இழந்து பதுக்கும் தொழிலை விட்டே ஓடியதால் ... பெட்ரோல் பொருட்களின் விலையேற்றம் வேறு பொருட்களின் விலையில் எந்த பாதிப்பும் ஏற்படுத்தவில்லை.  UPA ஆட்சிக்காலத்தில் வெங்காயம், பூண்டு , தக்காளி , பருப்பு வகைகள் எல்லாமே மிக அதிகமான விலையில் விற்கப்பட்டது உங்களுக்கு தெரிந்திருக்கும்                  

வேறு நாடுகளுடன் பரிவர்த்தனைக்கு  டாலர் தான் உபயோகப்படுத்தி  வருகிறோம் அதையும் மாற்றி ஜப்பான் உட்பட சில நாடுகளுடன் நேரடியாக ரூபாயிலேயே வர்த்தகம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

உள்கட்டமைப்பு (Infrastructure)
இதற்க்கு முந்திய அரசுகளை எடுத்துக்கொண்டால் உள்கட்டமைப்பில் இந்த அரசை போல வேகமாக வேறு எந்த அரசும் செய்யவில்லை என்று சொல்லலாம்.

சாலைகளாக இருக்கட்டும் , துறைமுகங்கள் மற்றும் கப்பல் சேவைகளாக இருக்கட்டும் விமான சேவைகளாக இருக்கட்டும், மின்சார துறையாக இருக்கட்டும் .. எல்லாவற்றிலும் இந்த அரசு அசுரவேகத்தில் பணியினை செய்துகொண்டு இருக்கிறது.

முந்தைய UPA அரசின் ஒரு நாளைக்கு 11 கிலோமீட்டர்கள் போடப்பட்டுக்கொண்டிருந்த நெடுஞ்சாலை துறை இந்த அரசில் 27 கிலோமீட்டர்கள் போட்டுகொண்டு இருக்கிறது ... வரப்பியும் நிதியாண்டு முடிவதற்குள் அது கிட்டத்தட்ட 45 கிலோமீட்டர்கள் என்று உயரும் வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது. கான்ராக்ட் கொடுப்பது மட்டுமல்லாமல் கொடுத்த நேரத்திற்குள் எல்லா வேலைகளும் முடிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய சாதனை.

நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த பல துறைமுகங்கள் இப்பொழுது லாபத்தில் இயங்க துவங்கி இருக்கிறது.

நீர்வழி போக்குவரத்து கனவாகி இருந்த நேரத்தில் இந்த அரசு 4 வருடத்தில் அதை நினைவாக்கி இருக்கிறது.

ரயில்வே துறையை பொறுத்தவரை , சென்ற 10 வருட  UPA ஆட்சி காலத்தில் பல திட்டங்கள் போடப்பட்டது. பட்ஜெட்டில் பணம் ஒதுக்குவார்கள் .. ஆனால் ஒரு வேலையும் நடைபெறாது . 100 வருட பழமையான சிக்னல் முறையே பின்பற்றிக்கொண்டிருந்தோம். மிகவும் நெரிசலான டெல்லி கொல்கத்தா ரயில் பாதையை பற்றி கவலைப்படுவோர் யாருமில்லாமல் இருந்தது. வடகிழக்கு மாகாணங்கள் மற்ற மாநிலங்களுடன் ரயில் மூலம் நேரடியாக இணைக்கப்படாமல் இருந்தது. இவை எல்லாம் அவர்கள் பேசினார்கள் , பேசினார்கள் , பேசிக்கொண்டே இருந்தார்கள். அதை பேசி பேசி ஒட்டு வாங்கினார்கள். ஆனால் இந்த அரசு ரயில்வேக்கான  பட்ஜெட்டை மூன்று மடங்கு அதிகரித்து எல்லாவற்றையும் மாற்றியுள்ளது. இன்று 7 வடகிழக்கு மாநிலங்களில் 6 மாநிலங்கள் இணைக்கப்பட்டு விட்டது.

பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் ரயில்வே துறையில் அனுமதித்துள்ளது. வரும் காலங்களில் இன்னும் சிறந்த சேவையை அவர்களிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.

வெளியுறவு துறை:

முன்பெப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவிற்கு உலக நாடுகளிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரித்துள்ளது. நமது குரலை செவிசாய்த்து உன்னிப்பாக உலக நாடுகள் கேட்கத்துவங்கியுள்ளது. இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளிலும் இப்பொழுது இரண்டே விதமான கட்சிகள்தான். இந்தியாவை (மோடியை) ஆதரிக்கும் கட்சிகள், இந்தியாவை (மோடியை) எதிர்க்கும் கட்சிகள்.

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமேரிக்கா கொடுத்த அழுத்தத்தை எதிர்கொண்டதாகட்டும் , பல வழிகளில் சீனாவின் எதிர்ப்பை சமாளிப்பதாகட்டும், பாகிஸ்தானை எதிர்ப்பதிலாகட்டும்... ஜப்பான் , பிரெஞ்சு மற்றும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடனான உறவிலாகட்டும் இந்தியாவின் வெளியுறவு துறை மிகவும் திறம்பட கையாண்டுகொண்டிருக்கிறது.

இதற்க்கு முந்தைய அரசுகளுடன் ஒப்பிடும்போது இந்த அரசின் செயல்பாடுகள் தீர்க்கமான முடிவோடு சரியான திசையிலேயே செல்வதாக கருதுகிறேன்.

ராணுவம் மற்றும் பாதுகாப்பு துறை:

இதை பற்றி பேசவேண்டுமானால்  அதற்க்கு உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் ராணுவ வலிமையை மேம்படுத்துவதை பற்றி பேசவேண்டும்.

நக்சல் மாவோயிடுகளை ஒடுக்குவதிலாகட்டும், காஷ்மீர் விஷயத்திலாகட்டும் மற்ற அரசுகளோடு ஒப்பிடும்போது இந்த அரசு திறமையாகவே கையாண்டுகொண்டிருக்கிறது என்றாலும், இன்னும் அதிகமாக செய்திருக்கலாமோ என்று எண்ண தோன்றுகிறது. அதுவும் காஷ்மீர் விஷயத்தில் செக்ஷன் 370 மற்றும் 35A வை றது செய்யாவிட்டால் என்ன நடவடிக்கை எடுத்தாலும் எந்த பிரயோஜனமும் இருக்காது என்பது என்னுடைய தீர்க்கமான எண்ணம் . இந்த விஷயத்தில் எனக்கு இந்த அரசிடம் சிறிது ஏமாற்றம் இருப்பது உண்மை.

ராணுவத்தை பொறுத்தவரை சென்ற அரசின் கையாலாகாத தனத்தால் தளவாடங்கள் விமானங்கள் கப்பல்கள் இல்லாமல் பலகீனமாக இருந்த நிலை மாறி , இப்பொழுது பலமான நிலைக்கு திரும்பியுள்ளது. ராணுவத்தின் துரித மற்றும் கடுமையான நடவடிக்கைகள் அதற்க்கு ஆளும் அரசின் ஆதரவையும்  கண்டு எதிரிகள் பயந்து போய் இருப்பது உண்மை.           

வேலைவாய்ப்பு :
இதை எப்படி கணக்கிடுவது? 2013 க்கு பிறகு புதியதாக PF ல் சேர்க்கப்பட்டவர்களை வைத்து கணக்கிடுவதா? புதியதாக தொழில் தொடங்கியவர்களை வைத்து கணக்கிடுவதா? எப்படி பார்த்தாலும் இந்த அரசு பல கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்கி இருப்பது உண்மைதான்.

அரசு வேலை என்று எடுத்துக்கொண்டால் 60 வயது என்பது ஓய்வு பெரும் வயது. எவ்வளவு மெனெக்கிட்டாலும் அவ்வளவு ஓய்வு பெற்றவர்கள் ஏதோ ஒரு காரணத்திற்க்காக காலியான அரசு பணியிடத்தை நிரப்புவது மட்டுமே செய்யமுடியும். இதில் பெரிதாக எந்த அரசும் சாதித்துவிட முடியாது. ஆனால் தனியாகிற துறைகளை ஊக்குவிப்பது மூலம், வெளிநாட்டு முதலீடுகளை கொண்டுவந்து அதை வைத்து தொழில் தொடங்குவது மூலம் , சிறு குறு தொழில்கள் தொடங்க உதவுவது மூலம் அரசு பல கோடி வேலை வாய்ப்புகளை முருவாக்க முடியும். அதை தான் செய்திருக்கிறது இந்த அரசு.

முத்ரா திட்டத்தின் மூலம் 15 கோடி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கடன் கொடுத்து அவர்கள் தொழில் தொடங்க உதவியுள்ளது. மிகவும் மிக மிக குறைவாக 7 கோடி பேர் நன்றாக தொழில் செய்கிறார்கள் என்றே வைத்துக்கொண்டாலும் 7 கோடி ஒரே ஒருவருக்கு வேலை கொடுத்திருக்கார்கள் என்று வைத்துக்கொண்டாலும் 7 கோடி மொத்தம் 14 கோடி பேருக்கு நேரடி வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதை தவிர புதியதாக PF ல் பதிந்துள்ளவர்கள் 1.5 கோடி பேர். ஆக மொத்தம் கிட்டத்தட்ட 14.5 கோடி வேலை வாய்ப்பை இந்த அரசு உருவாகியுள்ளது.

மேலும்:
இதையெல்லாம் தவிர வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு ராஷ்ட்ரிய ஸ்வஸ்திய பீமா யோஜனா என்ற சுகாதார காப்பீடு அளித்தது ,  30 கோடி  பெண்களுக்கு எரிவாயு சிலிண்டர் அளித்தது , இந்தியா முழுவதுள்ள மக்களுக்கு விபத்து மற்றும் உயிர் காப்பீடு அளித்தது, கிட்டத்தட்ட 75 லட்சம் கழிப்பறை காட்டிக்கொடுத்தது. வடகிழக்கு மாநிலங்களில் இருந்து இந்தியாவின் எல்லா இடத்திற்கும் மின்சார வசதி செய்து கொடுத்தது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாம் இந்த அரசு 4 வருடத்தில் செய்தது. இதற்க்கு முந்தைய அரசுகள் 60 வருடங்களாக செய்ய தவறியது.      

எதிர்க்கட்சிகள்,மேடைகளிலும் மீடியாவில் ட்விட்டரிலும் சொல்லும் நான்கே நான்கு குடைசாட்டுகளைதான் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். 1. டெமோனிடைசேஷன் 2. GST யில் இருக்கும் பல சதவிகித வரிகள் 3. பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு 4. மாட்டு வதைக்காக மக்களை தாக்குவது ...

டெமோனிடைசேஷனால் நேரடியாக பாதிக்கப்பட்டது பெரும் கருப்பு பண முதலாளிகளும் , பதுக்கல்காரர்களும்தான். பொது மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை . அதனால் எனக்கு எதிர்க்கட்சிகள் கூற்றில் உடன்பாடில்லை. GST யை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி சொல்வது வெச்சா குடுமி சரைச்சா மொட்டை போல  28 %  அதற்க்கு அடுத்து 0 % என்பது நகைப்பிற்கு உரியது. அரசிற்கு வருமானமே வரி மூலம் தான் என்னும்போது 28% வரி அதிகம் என்று உற்பத்தியாளர்களும் , மாநில அரசும் ( GST Council ) சொன்னால் நேரடியாக 0% கு தான் போகவேண்டும். அப்போகுது அரசின் வருவாய்க்கு என்ன செய்வார்கள்? முட்டாள்தனமான வாதம் எதிர்கட்சிகளுடையது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியுடையது .

பெட்ரோலிய பொருட்கள் விலையேற்றம் என்னை பொறுத்தவரை சரிதான். மக்களாகிய நமக்கும் இதில் பங்குண்டு .. பெட்ரோலிய பொருட்களின் பயன்பாட்டை நாமும் குறைத்துக்கொள்ளவேண்டும். இரு சக்கர வாகனங்களில் போக முடிந்த இடங்களுக்கு 4 சக்கர வாகனம் எதற்கு ? பேருந்து மின்சார ரயில் போன்றவற்றை உபயோக படுத்தவேண்டும் முடிந்த வரை.

பசு வதை தடுப்பு சட்டம் என்று இருக்கும் போது ... மாநில அரசுகள் அதை ஒழுங்காக அமல் படுத்தவேண்டும். மக்களை மக்களே துன்புறுத்துவதை நான் ஏற்கவில்லை .. இந்த விஷயத்தில் மத்திய மாநில அரசுகள் பசு வதையையும், இறைச்சிக்காக மாடுகளை கொல்வதை தடுக்கவும் கடுமையான சட்டங்களை இயற்றி அதை சரியாக அமல்படுத்தி அதை தடுக்கவேண்டும். மறுபுறம் இந்த விஷயத்திற்காக  மக்களை மக்களே கொல்வதை தடுக்க கடுமையான சட்டமியற்றி அதை அமல்படுத்தவேண்டும்.

மோடி இல்லாவிட்டால் அடுத்தது யார்?:
இந்த கேள்வி அடுத்த தேர்தலில் வாக்களிக்க மேலே உள்ள காரணங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் என்பது என்னுடைய எண்ணம்.
ஒருவன் பணக்காரன் என்பதால் அவனுக்கு  பிரதமராகும் தகுதி வந்துவிடுமா? ஒருவனது  தந்தை பாட்டி போன்றவர்கள் பிரதமராக இருந்தார்கள் என்பதால் அவனுக்கு பிரதமராகும் தகுதி வந்துவிடுமா? அப்படி நினைத்துக்கொண்டிருப்பவர்தான் ராகுல் காந்தி. நேரத்திற்கு தகுந்தாற்போல மாநிலத்திற்கு தகுந்தாற்போல , இதுவாகவும் , இஸ்லாமியனாகவும், கிருஸ்துவனாகவும் வேடம் போடுவதா தகுதி ? இந்தியாவை பற்றியும், நமது பண்பாடு கலாச்சாரத்தை பற்றி தெரியாதவர்தான் ராகுல்காந்தி . பதவிக்காக மக்களிடையே பிரிவினை உண்டாக்கி கொண்டிருப்பவர்தான் ராகுல்காந்தி. இவருக்கு துளியும் கிடையாது பிரதமராகும் தகுதி.
இவர் இல்லை என்றால் தான்தான் என்ற மமதை கொண்ட பிரிவினை எண்ணம் கொண்ட மம்தாவா? இவரால் மேற்குவங்கத்தையே சரியாக ஆள முடியவில்லை.. இவரால் மேற்குவங்கத்தையே முன்னேற்ற பாதையில் கொண்டு வர முடியவில்லை . இவரையா நான் தேர்ந்தெடுப்பேன்?
சந்திரபாபு நாயுடு ...... ம்ம்ம்ம்  .... இவருக்கு மற்ற எதிர்க்கட்சிகள் எல்லோரும் சேர்ந்து ஆதரவளித்தால் ..... ம்ம்ம்ம் ஊழலில் திளைப்பவர் ஆயிற்றே .. நேர்மையானவராக எனக்கு தெரியவில்லை. பதவிக்காக முன்னுக்கு பின் முரணாக பேசுபவர். நம்பிக்கை தன்மையற்றவர். மாட்டேன் இவருக்கும் போடமாட்டேன் ... பின்பு யார் இருக்கிறார்கள் .. மோடி இல்லையென்றால் அடுத்து ....

4-5% GDPஎன்று தள்ளாடி கொண்டிருந்த பொருளாதாரத்தை சரியாக்கி, அதற்கான கட்டமைப்பை வலுவாக்கி 7-8%  GDP கொண்டுவந்த மோடிக்கே 2019ல் எனது வாக்கு.

உலக அரங்கில் இந்தியாவிற்கு என்று ஒரு பெரும் மரியாதையை ஏற்படுத்தி கொடுத்த மோடிக்கே 2019ல் எனது வாக்கு.

உள்நாட்டு பாதுகாப்பையும் , ராணுவ பலத்தையும் அதிகரித்த மோடிக்கே 2019ல் எனது வாக்கு

சிறு குறு தொழில் வளர்ச்சிக்காக முத்ரா கடன் கொடுத்து பல பிற்படுத்தப்பட்டவர்களை முதலாளியாகிய மோடிக்கே 2019ல் எனது வாக்கு.

என் மனதில் எழுந்த 7 கேள்விகளுக்கும் கிடைத்த ஒரே விடை மோடி அதனால் அவருக்கே 2019ல் எனது வாக்கு.  

மோடிக்கு மாற்றாக வென்று அரசியவாதி வந்தால் பிறகு பார்க்கலாம்.

நான் முடிவெடுத்துவிட்டேன் .. நீங்கள் ?

SRK

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...