Thursday, 10 January 2019

ஒரே தேசம் ஒரே தேர்தல்

சிறப்புக் கட்டுரை-

*ஒரே தேசம் ஒரே தேர்தல்*

*ஜனநாயகத்துக்கு எதிரானதா?*

திங்கள், 3 அக் 2016

‘ஒரே தேசம், ஒரே தேர்தல்’ கோஷத்தை முன்வைத்தது பாஜக. நாடு முழுக்க மக்களவைக்கும், சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற உட்பொருளைக் கொண்ட பாஜகவின் கோஷத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ஆதரித்திருந்தார். தேர்தல் செலவுகள் குறையும் என்ற நோக்கத்தோடு முன்வைக்கப்பட்ட கோஷத்தின் வெவ்வேறு பரிணாமங்களைப் பேசும் இக்கட்டுரை, இந்திய சமூகங்களின் பன்மைத்துவம் குறித்த அரசியல் பொருள் பொதிந்த கேள்விகளையும் எழுப்புகிறது. இதோ அந்தக் கட்டுரை…
மிக வேகமாக தேசிய அளவிலான விவாதப் பொருளாக மாறிக் கொண்டிருக்கிறது, சில வருடங்களாகவே பேசப்பட்டுக் கொண்டிருக்கும் ‘ஒரே தேர்தல்’ திட்டம். இது குறித்து தொலைக்காட்சி ஸ்டூடியோக்களில் விவாதிக்கப்படுவது மட்டுமின்றி, மத்திய அரசு இணையதளம் ஒன்றின் வழியே குடிமக்களிடம் இருந்து அவர்கள் விருப்பம் தொடர்பான கருத்துகளை பெற்றுக் கொண்டிருக்கிறது.
குறிப்பிடப்படும், இணைய கருத்துக் கோரல்கள், அக்டோபரின் மத்தி வரை நடக்கவிருக்கின்றன. இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவுகளே கிடைக்கும் என்பதும் தெரிந்ததுதான். ஏனெனில் அங்கே முன்வைக்கப்படும் விவாதம்: ‘ஒரே தேர்தல்’ பெருமளவு பணம் சேமிக்க உதவும். எந்த தடையும் இல்லாமல் முன்னேற்றத்துக்கான திட்டங்களை அரசு கையிலெடுத்து செய்யும். யதார்த்தத்தில் இருக்கும் ஒரே கேள்வி விருப்பம் குறித்தது அல்ல; சாத்தியம் குறித்தது. இந்திய அரசியலமைப்பு கூறும் இந்திய ஜனநாயகத்தின் கூட்டாட்சி இயல்பை வைத்துக்கொண்டு, மத்திய, மாநில சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படுவது சாத்தியமா?
இந்தியாவில் தேர்தல்களின்போது வேட்பாளர்களாலும், அரசியல் கட்சிகளாலும், அரசாலும் (தேர்தல் கமிஷன்) பெருமளவு பணம் செலவு செய்யப்படுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. வேட்பாளர் தன் பிரச்சாரச் செலவுக்காக எவ்வளவு பணம் செலவு செய்யலாம் என சட்ட அளவு இருக்கும் போதிலும், பெரும்பாலும் வேட்பாளர்கள், தாங்கள் எவ்வளவு அதிகம் பணம் செலவு செய்கிறோமோ அவ்வளவு பெரிய வாக்காளர் கூட்டத்தை சென்றடையலாம் என்னும் நம்பிக்கையில்தான் செலவு செய்கிறார்கள்.
இருப்பினும், ஒரே தேர்தலுக்கு ஆதரவு தெரிவிக்கும் விவாதங்கள் வேட்பாளர்களோ, அரசியல் கட்சிகளோ செலவழிக்கும் பணத்தை குறித்து இருப்பதில்லை. மாறாக, தேர்தல் கமிஷன் செலவழிக்கும் பணம் குறித்தவையாகவே இருக்கின்றன. குறைவான தேர்தல்கள் நடந்தால், செலவுகளும் குறையும் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை. ஆனால், ஜனநாயகத்தின் உயிர்நாடியே தேர்தல்கள்தான். மக்களவைத் தேர்தல்களும், சட்டசபைத் தேர்தல்களும் ஒரே நேரத்தில் வந்தால், அது இயல்பானது. ஆனால், செலவுகளையும் தேர்தல் எண்ணிக்கைகளையும் குறைக்கும் பொருட்டு அது திணிக்கப்பட்டால், அது பெரும் கண்டனத்துக்குரியது. ஏனெனில், அது ஜனநாயக கொள்கைகளுக்கு முன் பணம் சார்ந்த கோட்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
மேம்படுத்தப்பட்ட அரசாட்சிக்காக ‘ஒரு தேர்தல்’ என்பது முன்வைக்கப்படும் மேலும் ஒரு விவாதம். தேர்தல்கள் நடக்கும்போது தேர்தல் நடத்தை விதிகள் பெரும்பாலான நேரத்தில் அமலில் இருக்கும். இதனால் அரசால் புது திட்டங்களைத் தொடங்க முடியாது. இறுதியில் வளர்ச்சி திட்டங்கள் தாமதப்படுத்தப்படும். இது உண்மை என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்த பிரச்னைக்குத் தீர்வாக, தேர்தல் நடத்தை விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரலாம். அரசு புதிய திட்டங்களையும் குறிப்பிட்ட காலம் வரை (மனுத்தாக்கல் செய்யப்படுவது வரை) தொடங்குவதை அனுமதிக்கலாம். தற்போது, தேர்தல் அறிவிக்கப்பட்ட உடனேயே தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்படுகிறது. மேலும், தேர்தல் முடிவுகளில் எந்த விளைவையும் ஏற்படுத்தாத கொள்கை தீர்மானங்கள் எதாவது எடுக்கப்பட்டால், அதை தேர்தல் கமிஷனோடு சேர்ந்து ஆலோசிக்க தேர்தல் நடத்தை விதிகளில் இடம் இருக்கிறது. அரசு அந்த முடிவுகளை எடுக்க தேர்தல் கமிஷன் அனுமதிக்கலாம்.
தேர்தல் நடத்தை விதிகள், மாநிலங்களவை தேர்தல்கள் நடக்கும் மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும். கொள்கை தீர்மானங்கள் தேர்தல் நடக்கும் மாநிலங்களின் தேர்தல் முடிவில் ஏதாவதொரு விளைவை உருவாக்காதபட்சத்தில், மத்தியிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் ஆட்சி ஸ்தம்பித்து போக ஒரு காரணமும் இல்லை. இந்நிலையில், தேர்தல்கள் நடத்தப்படுவது ஆட்சியை நிறுத்துவதில்லை; ஆட்சி செய்ய வேண்டியவர்களின் சந்தேக நோக்கங்கள்தான் அரசாட்சியை நிறுத்துகிறது.
கூட்டாட்சி முறையைக் குறைத்து மதிப்பிடுதல்
‘ஒரு தேசம், ஒரு தேர்தல்’ எனும் கோஷம் அல்லது விவாதம், தவறாக வழிநடத்துவதாக இருக்கிறது. எந்த சந்தேகமும் இன்றி, இந்தியா ஒரு நாடு தான். இந்திய அரசியலமைப்புச் சட்டம், இந்தியாவில் 29 மாநிலங்கள் இருப்பதையும், இம்மாநிலங்களுக்கு தேர்தல் மற்றும் அரசமைப்பில் தனி அரசியலமைப்பு தகுதி இருப்பதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரிக்கிறது. ‘ஒரு தேசத்துக்கு’, ‘ஒரு தேர்தல்’ இருக்கத்தான் செய்கிறது. அது மக்களவைக்கான தேர்தல்.
அனைத்து மாநிலங்களையும், சில சமயம் பஞ்சாயத்துக்களையும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வற்புறுத்துவது, நம் அரசியலமைப்பு கூறும் கூட்டாட்சி முறையை எதிர்த்து, ஒற்றையாட்சி முறையை நோக்கி நாட்டை நகர்த்தும் முயற்சி ஆகும். இந்தியா கூட்டாட்சி அமைப்பும், பல கட்சி ஜனநாயகமும் இருக்கும் நாடு. இங்கே மாநிலங்களவைக்கும், மக்களவைக்கும் தேர்தல்கள் தனித்தனியே நடத்தப்படுகின்றன. வாக்காளர்கள், தாங்கள் வாக்குப்படி தேர்வு செய்யும் இரண்டுவிதமான அரசை மனதில் வைத்துக்கொண்டு வாக்களிக்கிறார்கள். இரண்டு விதமான அரசுகளுக்கு ஒரே நேரத்தில், ஒரே வாக்குச்சாவடியில், ஒரே நாளில் வாக்களிக்கச் சொல்லும்போது, வாக்காளர்கள் குழம்பிப் போவார்கள். மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் தன்மை வாக்காளர்களிடம் இருக்கிறது. இது சாட்சியங்களால் உருவாக்கப்பட்ட அனுமானம் கிடையாது; விதிவிலக்கு கிடையாது; இதுதான் விதி.
சாட்சியங்கள்
1989 பொது தேர்தல்களில் இருந்து பார்த்தால், இதுவரை 31 முறை மாநிலங்களவை மற்றும் மக்களவை தேர்தல் பல மாநிலங்களில் ஒரே நேரத்தில் நடந்திருக்கிறது. ஆந்திரப்பிரதேசம் (1989, 1999, 2004, 2009 மற்றும் 2014), ஒடிசா (2004, 2009 மற்றும் 2014), கர்நாடகா (1989, 1999 மற்றும் 2004), சிக்கிம் (2009 மற்றும் 2014), தமிழ்நாடு (1989, 1991 மற்றும் 1996), மஹாராஷ்டிரா (1999), அசாம் (1991 மற்றும் 1996), ஹரியானா (1991 மற்றும் 1996), கேரளா (1989, 1991 மற்றும் 1996), உத்திரப்பிரதேசம் (1989 மற்றும் 1991), மேற்கு வங்காளம் (1991 மற்றும் 1996), அருணாச்சலப் பிரதேசம் (2009 மற்றும் 2014), தெலுங்கானா (2014).
இப்படி மக்களவை தேர்தலும், மாநிலங்களவை தேர்தலும் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட தருணங்களில், 24 சந்தர்ப்பங்களில் முக்கிய கட்சிகள் (மக்களவை மற்றும் மாநிலங்களவையில்) ஒரே விகிதத்தில்தான் வாக்குகள் பெற்றிருக்கின்றன. ஏழு முறை மட்டுமே வாக்காளர்களின் தேர்வு மாறியிருக்கிறது. 1989, 1991 மற்றும் 1996ஆம் ஆண்டில், தமிழகத்தில், காங்கிரஸ் மற்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தால் பெறப்பட்ட வாக்குகள், மாநிலங்களவை மற்றும் மக்களவைக்கு வித்தியாசமாக இருந்தன. வேறு உதாரணங்கள், 2004 மற்றும் 2014ஆம் ஆண்டுகளின் அருணாச்சலப் பிரதேச தேர்தல்கள், ஹரியானாவின் 1996 தேர்தல் மற்றும் ஆந்திராவின் 2014ஆம் ஆண்டு தேர்தல். இதே சமயத்தில், பல மாநிலங்களில் மாநிலங்களவை தேர்தலும், மக்களவை தேர்தலும் வெவ்வேறு சமயத்தில் நடத்தப்பட்டபோது, அதன் முடிவுகள் வித்தியாசமாக இருந்திருக்கின்றன.
இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட தேவைப்படும் அரசியலமைப்பு திருத்தங்கள், அவை முறையில்லாத சமயங்களில் கலைக்கப்படுவதை மாநிலங்கள் ஏற்றுக் கொள்ளுதல், ஒரு அரசு தன் ஆட்சிக் காலத்தை முடிக்கும் முன்னர் வீழ்ந்தால் என்னவாகும் எனும் கேள்வி… இதுபோன்ற சில சிக்கல்கள் - இவை அனைத்தையும் கடந்து, ‘ஒரே தேர்தல்’ நடைமுறைப்படுத்தப்பட்டால், இந்தியாவின் சமூக வேற்றுமையை அடையாளப்படுத்த அவசியமாக இருக்கும் அரசியல் பன்மை தன்மைக்கு எதிராக இது இருக்கும்.

நன்றி: தி இந்து

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...