தேர்தலுக்கு முன் பாஜக வலுவான ஒரு கூட்டணியை அமைக்க முடிவு செய்து அதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் பீஹாரை தொடர்ந்து, தமிழகத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., தொகுதி பங்கீடு குறித்த உடன்பாடு, வரும் ஜனவரி மாதத்தில் ஏற்பட உள்ளது. இதற்கான பேச்சு வார்த்தைகள் டெல்லி, சென்னை உள்ளிட்ட பல இடங்களில் அண்மைக்காலமாக நடைபெற்று வந்தது.
அதன்படி அதிமுகவுக்கு, 25 தொகுதிகள் போக, மீதமுள்ள, 15 தொகுதிகளில், ஏழில், பாஜக போட்டியிடுகிறது. எஞ்சிய எட்டு தொகுதிகளை, பா.ம.க.,வுக்கு, நான்கு; தே.மு.க.,வுக்கு, மூன்று, புதிய தமிழகம் கட்சிக்கு, ஒன்று என பங்கிட, பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன் முதல் கட்டமாக அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், டில்லி சென்று, பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, கூட்டணி குறித்து விவாதித்துள்ளனர்.
இது தொடர்பாக சர்வதேச அளவில் பிரபலமான, அமெரிக்க நிறுவனம் ஒன்று, இந்தியாவில் நடத்தி கருத்துக்க் கணிப்பில் 252 முதல், 265 தொகுதிகள் வரை, பாஜக வெற்றி பெறும் என்றும், 150 முதல், 160 தொகுதிகள் வரை, காங்கிரசுக்கு கிடைக்கும் என்றும், மற்ற மாநில கட்சிகளுக்கு, 120 தொகுதிகள் கிடைக்கும்' என, கூறப்பட்டுள்ளது.
இதனால் ஆட்சி அமைக்க, அ.தி.மு.க., - ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆகிய கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முடிவு செய்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை அதிமுக, பாஜக, பாமக,தேமுதிக மற்றும் புதிய தமிழகம் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிட்டால், 34 தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என, அதே சர்வே தெரிவித்திருக்கிறது.
மேலும் அதிமுகவில் இருந்து தினகரன் விலகியுள்ளதால் பிரியும் வாக்குகளை பாமக சரிகட்டும் என கருதப்படுகிறது. புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், தர்மபுரி, மயிலாடுதுறை, சேலம், ஆரணி, வேலுார் ஆகிய தொகுதிகள் வேண்டும் என, பாமக தரப்பில் கேட்கப்பட்டுள்ளது.
ஆனால், அ.தி.மு.க., தரப்பில், தர்மபுரி, விழுப்புரம், புதுச்சேரி,மயிலாடுதுறை, திருநெல்வேலி அல்லது துாத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய தொகுதிகளை தருவதாக கூறப்பட்டுள்ளது.
இன்னும், பா.ம.க., தரப்பிலிருந்து, எந்த ஒரு முடிவும் தெரிவிக்கப்படாமல் இருப்பதால், திரைமறைவு பேச்சு வார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
தே.மு.தி.க., தரப்பில், கள்ளக்குறிச்சி, ஈரோடு, சென்னையில் ஒன்று, மதுரை, நீலகிரி ஆகிய, ஐந்து தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன.ஆனால், கள்ளக்குறிச்சி, நீலகிரி, சென்னையில் ஒன்று என, மூன்று தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என, அ.தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டதால், இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை.
பாஜக தரப்பில் தென் சென்னை,சிவகங்கை,குமரி, நெல்லை, துாத்துக்குடி, கோவை, பெரம்பலுார், தென்காசி ஆகிய தொகுதிகள், கேட்கப் பட்டுள்ளன. இதில், தென்காசி தொகுதி மட்டும், புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப் படுகிறது.
கிட்டத்தட்ட அதிமுக, பாஜக இடையே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை, 90 சதவீத அளவுக்கு முடிவடைந்துள்ளது. இதையடுத்து அனைத்து பேச்சு வார்த்தைகளும் முடிந்து வரும் ஜனவரி மாதம் உடன்பாடு குறித்து அதிகாரப்பூர்மாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது..
No comments:
Post a Comment