பா.ஜ.,வின் மவுனம் மிகச் சரியானதே...!
* சபரிமலை விவகாரம்
சென்னை
சபரிமலை விவகாரத்தில் மத்திய பா.ஜ., மற்றும் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பதாக பா.ஜ., விசுவாசிகள் பலர் முகநூலில் மிகக் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள். இதை தவறு என சொல்லமாட்டேன். கருத்து சொல்வது அவரவர்கள் விருப்பம். அதை ஏற்றுக் கொள்வதும் அல்லது ஏற்றுக் கொள்ளாததும் அவரவர்கள் விருப்பம். அதே நேரம் விமர்சனம் என்பது ஆரோக்யமாக இருக்க வேண்டும். தவறு என மேலோட்டமாக சொல்லாமல் தவறு என்ன என்பதை தெளிவு படுத்த வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் மத்திய அரசு மற்றும் பிரதமர் மோடியின் மவுனம் ‘மிகச் சரியானதே’ என்பேன்.
முதலில் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். பிரதமர் மோடி ஒன்றும் கடவுள் இல்லை. எந்த பிரச்சனையானாலும் அதை உடனுக்குடன் முடித்துவிட அவர் ராமரோ அல்லது கிருஷ்ணரோ இல்லை.. ஒருவேளை கேரளாவில் பா.ஜ., ஆட்சி இருந்து சபரிமலை விஷயத்தில் மத்திய பா.ஜ.வோ அல்லது பிரதமர் மோடியோ தலையிடாமல் இருந்திருந்தால் உங்களை விட நான் பா.ஜ.,வை கடுமையாக விமர்சித்திருப்பேன். ஆனால், கேரளாவில் நடப்பது கம்யூனிஸ்ட் ஆட்சி. எனவே இந்த விஷயத்தில் மத்திய அரசால் எடுத்தோம் கவிழ்த்தோம் என செயல்பட முடியாது. கட்சி என்பது வேறு. பிரதமர் பதவி என்பது வேறு. இரண்டிற்கும் அதிக வித்தியாசம் உண்டு.
சபரிமலை விவகாரத்தில் வீதிக்கு வந்து போராட்டத்தை துவக்கிய கட்சி பா.ஜ.,தான். இதை யாரும் மறுக்க முடியாது. இதன் பின் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் வி.எச்.பி. உள்ளிட்ட இந்து உணர்வு கொண்ட அமைப்புகள் போராட பின்னர் பொதுமக்களும் தெருவில் இறங்கி போராட துவங்கினர். எந்த ஒரு பிரச்னையிலும் பொதுமக்கள் களத்தில் இறங்கினால்தான் வெற்றி கிடைக்கும். இந்த விஷயத்தில் கேரள பா.ஜ.,வினர் வேகமாக செயல்பட்டதோடு விவேகத்தோடும் செயல்பட்டு வருகின்றனர்.
நாடு சுதந்திரம் அடைய லட்சக்கணக்கான மக்கள் உயிர்நீத்தனர். எனவே சுதந்திரத்திற்குப் பின் அரசியல் அமைப்பு சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர், மக்களை மனதில் கொண்டு சட்டத்தை கடுமையாக உருவாக்காமல் இருந்தார். ஆனால், இப்போதைய அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலர் சட்டத்தை தங்கள் கையில்எடுத்துக் கொண்டுவிட்டனர். சட்டத்தை எப்படி ஏமாற்றலாம் என்பதை தெளிவாக தெரிந்து வைத்துக் கொண்டு செயல்படுகின்றனர். அம்பேத்கர் இப்போது இருந்திருந்தால் சட்டத்தை மாற்றி கடுமையாக்கியிருப்பார்.
கேரளாவைப் பொறுத்தவரை அங்கு பா.ஜ.,வுக்கு பெரிய அளவில் செல்வாக்கு கிடையாது. அங்கு காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இடையேதான் போட்டி நடக்கும். இருகட்சிகளும் மாறி, மாறி ஆட்சி அமைத்து வருகின்றனர். இந்த இரண்டு கட்சிகளும் இல்லாமல் பா.ஜ., ஆட்சி அமைக்க வேண்டுமானால் ஏதாவது ஒரு அதிசயம் நடக்க வேண்டும். அந்த அதிசயம்தான் ஐயப்பன் ரூபத்தில் தற்போது நடந்திருக்கிறது.
ராவணனை அழிக்கத்தான் ராமர் அவதாரம் எடுத்தார். ஆனால், ஒரு கட்டத்தில் குடும்ப சூழல் காரணமாக ராமர், ராஜாவாக பதவியேற்று ராவணன் பற்றிய எண்ணத்தை மறந்து விடுவாரோ என்ற கவலை ஏற்பட்டது. ராமரை காட்டிற்கு அனுப்ப வேண்டும். அதை யார் சொல்வது. ராமருடைய அம்மா கவுசல்யாவால் அப்படி சொல்லமுடியாது. சுமித்ராவும் ராமன் மேல் அன்பு கொண்டவள். சரி பரதன் அம்மா கைகேயி சொல்வாரா என்றால் ராமரை வளர்த்தவரே கைகேயிதான். ராமர் மேல் உயிரே வைத்திருந்தார். ஆனால், கைகேயி சொல்லும் வாக்கை ராமர் அப்படியே ஏற்றுக் கொள்வார். எனவேதான் கைகேயி நாக்கில் சில நிமிடங்கள் சரஸ்வதி சென்று ராமரை வனவாசம் செல்லும்படி கூறினார். இது புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது.
இதுபோலத்தான் இந்துக்களை யார்,, எப்படி ஒற்றுமைபடுத்துவது என யோசிக்கும் நேரத்தில் ஐயப்பனாக பார்த்து கேரள முதல்வர் பினராயி விஜயன் மூலம் ஒரு நாடகத்தை நடத்தி இருக்கிறார். இதுதான் உண்மை. இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு சங்கு ஊதப்பட்டு வரும் நிலையில், அடுத்து நடக்க உள்ள கேரள சட்டசபை தேர்தலில் கம்யூனிஸ்ட் வெற்றி பெற வாய்ப்பே இல்லை என்பது குழந்தைக்குக்கூட தெரியும். ராகுல் காந்தி உபயத்தால் காங்கிரஸ் கட்சியும் கரைந்து வருகிறது. இந்த நிலையில், ஐயப்பனாக பார்த்து பா.ஜ.,வுக்கு உதவி செய்திருக்கிறார் என்பதே நிதர்சனமான உண்மை.
அப்படி என்றால் ஐயப்பன் விவகாரத்தை பா.ஜ.,வும் அரசியல் ஆக்குகிறது என நீங்கள் நினைக்கலாம். முதலில் அப்படி நினைத்து பா.ஜ., போராட்டத்தில் இறங்கவில்லை. மக்கள் எழுச்சியை பார்த்தவுடன் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இந்துக்களுக்கு ஆதரவாக அதாவது மத விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக்கூடாது என கேரள காங்கிரசார் கூறி இந்துக்களின் எழுச்சியை தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள முயன்றனர். இந்த நேரத்தில்தான் இந்த விஷயத்தில் பா.ஜ.,வும் அரசியல் ஆதாரம் தேட முயற்சி மேற்கொண்டது.
கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்விக்கான காரணம் குறித்து அப்போதைய மத்திய அமைச்சரும் கேரளாவைச் சேர்ந்தவருமான ஏ.கே. அந்தோனி, காங்கிரஸ் தலைமையிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதில், சிறுபான்மையினர் ஓட்டுக்களுக்காக பெரும்பான்மையினர் (இந்துக்கள்) ஓட்டை இழந்ததால் இந்த தோல்வி என சொல்லியிருந்தார். இதனால்தான் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, இந்து கோவிலுக்கு சென்று ஓட்டுக்காக நாடகமாடுகிறார்.
கேரளாவைப் பொறுத்தவரை இந்துகள் ஓட்டை பெற்றால்தான் ஆட்சி அமைக்க முடியும் என காங்கிரஸ் நினைக்கிறது. காரணம் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை அவர்கள் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இரண்டு கட்சிக்கும் ஓட்டளிப்பார்கள். எனவே இந்துக்கள் ஓட்டு அதிகம் கிடைத்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஐயப்பன் விவகாரத்தால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு இந்துக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள் என்பது உறுதி. எனவே இந்துக்கள் மீது கருணை காட்டுவது போல் காங்கிரஸ் நடிக்கத் துவங்கி உள்ளது. எனவேதான் இந்த விஷயத்தில் பா.ஜ.,வும் அரசியல் செய்கிறது. தவிர பா.ஜ.,வும் அரசியல்கட்சி தான் என்பதை மறந்துவிட வேண்டாம்.
இந்தியாவில் உ.பி.,யியை விட பின்தங்கிய மாநிலம் கேரளா. இதற்கு காரணம் கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ்தான் என்பதை மக்கள் உணரத் துவங்கி விட்டனர். இது ஓரு நல்ல மாற்றத்திற்கான அறிகுறி. இதை பா.ஜ., மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது. இந்த நேரத்தில் மத்திய பா.ஜ.,வோ அல்லது பிரதமர் மோடியோ தேவை இல்லாமல் எதையோ செய்யப் போய் அது கம்யூனிஸ்ட்டுக்கு சாதகமாக மாறிவிட்டால் நிலைமை மோசமடைந்துவிடும். இப்போதுதான் இந்துக்கள் விழித்துக் கொள்ள துவங்கி விட்டனர். ஐயப்பன் பிரச்னை தென் மாநில இந்துக்களை ஓற்றுமையாக்கி உள்ளது.
ஐயப்பன் பிரச்னையில் சட்ட ஓழுங்கு பிரச்னையை காரணம் காட்டி ஆட்சியை கவிழ்த்துவிட்டால் அதன்மூலம் அனுதாபம் தேடலாம் என கம்யூனிஸ்ட் கட்சி நினைக்கிறது. கேரளாவில் கம்யூனிஸ்ட் அரசு எல்லா விதத்திலும் தோல்வி அடைந்துள்ளது. ஆட்சியாளர்கள் மேல் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். ஐயப்பன் விவகாரத்தில் முக்கிய கம்யூனிஸ்ட் பொறுப்பாளர்கள் கட்சியிலிருந்து விலகி பா.ஜ.,வில் சேர்ந்து வருகின்றனர்.
என்னைப் பொறுத்தவரை சபரிமலை பிரச்னையை ஐயப்பன் பார்த்துக் கொள்வார். இந்து கடவுள்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர் ஐயப்பன். அடுத்த சில நாட்களில் சபரிமலை பிரச்னை இந்துக்களுக்கு சாதகமாக முடியும். கம்யூனிஸ்ட் கட்சியினரே இந்த விஷயத்தில் ‘அந்தர்பல்டி’ அடித்தாலும் அடிப்பார்கள். மேலும் கேரள இந்துக்கள் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுபவர்கள். இந்த விஷயத்தை எளிதாக விடமாட்டார்கள். அப்படி விட்டுவிட்டால் குருவாயூர். பத்மனாம ஸ்வாமி கோயிலுக்கும் ஆபத்து வரும் என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். விரைவில் நல்லது நடக்கும்.
எனவே சபரிமலை விவகாரத்தில் மத்திய பா.ஜ.,வின் மவுனம் மிகச் சரியானதே...!
சுவாமியே சரணம் ஐயப்பா...
No comments:
Post a Comment