#தெரிந்த_பெயர், #தெரியாத_விவரம்: #திருவண்ணாமலை_கிரிவலம்.
* திருவண்ணாமலை மலையை பக்தர்கள் பக்தியோடு சுற்றிக் கும்பிடும் நிகழ்வு கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை. வலம் என்றால் சுற்றுதல் என்று பொருள்.
* அண்ணாமலையார் கோயில் 24 ஏக்கர் பரப்பளவில் 6 பிரகாரங்கள், 9 ராஜ கோபுரங்கள் கொண்ட கோயிலாகும். இக்கோயில் மலையடிவாரத்தில் இருப்பது சிறப்பு. இச்சிவாலயத்தில் 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1000 தூண்களைக் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதன் அருகே பாதாள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன.
* அண்ணாமலையார் கோயிலில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. அவைகளில் ராஜ கோபுரம், பேய் கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், திருமஞ்சன கோபுரம், கிளிக் கோபுரம், வல்லாள மகாராஜா கோபுரம் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும். தெற்கு கட்டை கோபுரம், வடக்கு கட்டை கோபுரம், மேற்கு கட்டை கோபுரம் ஆகிய கோபுரங்களும் உள்ளன.
* இம்மலை 2,668 அடி உயரமானதாகும். கார்த்திகை தீபத் திருவிழா நாளின் மாலையில் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படுகிறது.
* கிரிவலப் பாதையின் தூரம் 14கி.மீ. ஆகும். மலையை வலம் வரும்போது நாம் இடப்பக்கம் நடக்க வேண்டும், ஏனென்றால் மலையை ஒட்டியுள்ள வலப்பக்கம் சித்தர்களும், யோகிகளும், தேவர்களும் வலம் வருவதாக ஐதீகம்.
* கிரிவலம் செல்ல பெளர்ணமி, அமாவாசை, மாத சிவராத்திரி ஆகிய நாள்கள் சிறந்தவை. எந்த இடத்திலிருந்து கிரிவலத்தை தொடங்கினோமோ அதே இடத்தில் முடித்தால்தான் கிரிவலம் முழுமை பெறும் என்கிறது அருணாசல புராணம்.
* சித்திரை மாத பெளர்ணமியன்று அண்ணாமலையார் கோயிலின் கிழக்கு கோபுரத்தின் முன் பசு நெய்யிட்டு, தாமரைத் தண்டு திரியினால் அகல் விளக்கு ஏற்றி, அதை உயர்த்திப் பிடித்து தீபத்துடன் அண்ணாமலையை தரிசித்து, பிறகு கிரிவலம் தொடங்க வேண்டும். பிறகு பூதநாராயணர் கோயிலில் பூக்களை தானமளித்து கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்.
* காயத்ரி மந்திரத்தை சொல்லியவாறே கிரிவலம் வந்தால் செல்வ வளம் பெருகும் என்று நம்பப்படுகிறது.
* கிரிவலப் பாதையில் செங்கம் சாலையிலிருந்து வலதுபுறம் திரும்பியதும் அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இது "பரஞ்ஜோதி தரிசனம்' என அழைக்கப்படுகிறது. குபேரலிங்கத்தின் வாசலிலிருந்து அண்ணாமலையை தரிசிக்க வேண்டும். இதனை "வைவஸ்வதலிங்கமுக தரிசனம்' என்பார்கள்.
* கிரிவலம் செல்லும்போது இறை சிந்தனையோடும் நாம ஜபத்தோடும் நடக்க வேண்டும். ஒவ்வொரு திக்கிலும் தியானித்து, கைகூப்பித் துதித்து, ஒரு நிறைமாத கர்ப்பிணி எவ்வளவு நிதானமாக நடப்பாரோ அவ்வளவு மெதுவாக, வைக்கும் காலடி சப்தம் கேட்காதபடியும் நடக்க வேண்டும்.
* பாதணிகள் அணியாமல் அண்ணாமலையை வலம் வர வேண்டும். நீர் அருந்துவதைத் தவிர வேறு எதையும் உண்ணக்கூடாது.
* எக்காரணம் கொண்டும் வாகனத்தில் அமர்ந்து கிரிவலம் வரக் கூடாது.
* கிரிவலப் பாதையில் 8 லிங்கங்கள் உள்ளன. 1.இந்திர லிங்கம். 2.அக்னி லிங்கம். 3. எமலிங்கம். 4.நிருதி லிங்கம். 5. வருண லிங்கம். 6. வாயு லிங்கம். 7. குபேர லிங்கம். 8. ஈசான்ய லிங்கம். கிரிவலப் பாதையில் இதுவே கடைசி லிங்கம். இந்த 8லிங்கங்களையும் வழிபாடு செய்வதன் மூலம் 80 விதமான பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
* இம்மலையானது 260 கோடி ஆண்டுகள் பழமையானது என டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.
* பால் பிரண்டன் எனும் ஆய்வாளார் "மெஸேஜ் ஃப்ரம் அருணாச்சலா' எனும் நூலில் "லெமூரியா கண்டத்தின் எஞ்சிய பகுதி திருவண்ணாமலை' எனக் கூறியுள்ளார்.
* சேஷாத்திரி சுவாமிகள், ரமணமகரிஷி, விசிறி சாமியார் (யோகி ராம் சூரத்குமார்) போன்றோர் சமாதிகள் அமைந்துள்ளன. தற்போதும் பல்வேறு சித்தர்கள் திருவண்ணாமலையில் வாழ்ந்து வருவதாக நம்புகிறார்கள்.
* அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் பிறந்தவர். அவர் கோபுரத்தில் கிளியாக மாறிப் பாடியமையால் அக்கோபுரத்தினை கிளிக்கோபுரம் என்று அழைக்கின்றார்கள். இத்தலத்தில் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான இடைக்காட்டுச் சித்தர் இத்தலத்திற்கு உரியவராக விளங்குகிறார்.
ஓம் நமசிவாய 🙏
No comments:
Post a Comment