நேரு வழி நேர் வழியா?
ஆர்.நடராஜன்
ஜவஹர்லால் நேருவைத் தன் மாமியாரின் தகப்பனாராகவும், மாமனாரின் மாமனாராகவும் மட்டுமே அறிந்து வைத்திருந்த சோனியா இப்போது நேருவின் மகிமையை மோடி அரசாங்கம் மழுங்கடித்து விட்டது என்று புலம்புகிறார். சமீபத்தில் சசிதரூர் எழுதிய நேரு பற்றிய புத்தகத்தை வெளியிட்ட சோனியா நேருவின் சாதனைகளை இப்போதைய ஆட்சியாளர்கள் மூடி மறைத்து விட்டார்கள் என்கிறார். சசிதரூரும், சோனியாவும் நேருவின் சாதனைகளாகக் குறிப்பிடுபவை நான்கு,
அவை: 1. நேருவின் ஜனநாய உணர்வு, 2. அவரது அயலுறவுக் கொள்கை, 3. சோஷலிசப் போக்கு, 4. மதசார்பின்மை. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போமா?
சர்தார் வல்லபாய் படேலை ஓரங்கட்டியது, ராஜாஜியையும், ஜெயப்பிரகாஷ் நாராயணனையும் வெளியேறச் செய்தது, இவை நேருவின் ஜனநாயகத்துக்கு எடுத்துக்காட்டுகள். தனக்கு மதமே இல்லை என்று சொல்லி இந்து மதத்தை எதிர்ப்பது மட்டுமே மதசார்பின்மையாகக் காட்டிக் கொண்ட நேருவின் செகூலரிசம். தொழிற்சாலைகள் இவ்வளவுதான் பொருட்களைத் தயாரிக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்து லைசென்ஸ், பெர்மிட், கோட்டா மூலம் பொருளாதாரத்தை முடக்கியது, சீனாவிடம் போரில் தோற்றது ஆகியவையே நேருவின் சாதனைகள்.
சோனியா, நேருவின் என்று சொல்லாமல் Ôநேருவியன்Õ என்று சொல்வதன் மூலம் நேரு சார்ந்த அவரது வம்சத்தையும், தான் உள்பட இந்த சாதனைக்காரர்களாகக் குறிப்பிடுகிறார். அதையும் பார்ப்போமா?
மொரார்ஜி தேசாயையும், காமராஜரையும், நிஜலிங்கப்பாவையும், சஞ்சீவ ரெட்டியையும் ஓரங்கட்டியது இந்திரா காந்தியின் ஜனநாயகம். நகர்வாலா மூலம் அரசு வங்கிப்பணத்தை அபகரித்து அந்த நகர்வாலாவை மேலுலகத்துக்கு நகர்த்தியது இந்திரா காந்தியின் பொருளாதார சாதனை. எமர்ஜென்சியைக் கொண்டு வந்து தேசத்தலைவர்களின் வாயை அடைத்தது இந்திரா ஜனநாயகத்தின் இன்னொரு பரிமாணம்.
போபர்ஸ் பீரங்கி ஊழல் ராஜிவ் காந்தியின் சாதனை. அதில் சம்பந்தப்பட்ட குவாத்ரோஷியைப் பத்திரமாகச் சொந்த நாட்டுக்கு அனுப்பியது சோனியாவின் சாதனை. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அதன் சொத்துக்காகப் பங்கு மாற்றத் தகிடுதத்ததில் ஈடுபட்ட சோனியா நம் நாட்டுப் பொருளாதாரத்துக்கு வளம் சேர்த்தவர் என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். இப்படிப்பட்ட "நேருவிய" சாதனைகளை எடுத்துச் சொல்லி அவர்களது புகழைப் பரப்பாதது மோடி சர்க்கார் செய்துள்ள பெருந்தவறு. இனியாவது அதைச் செய்யட்டும். அது 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிபலிக்கட்டும்.
சோனியாவின் இந்த அறிவுப்பூர்வமான அலசலை ராகுல் காந்தி போன்ற அறிவுஜீவிகளும், சசிதரூர் போன்ற நேரு குடும்பத்தின் பாதந்தாங்கிகளும் வைத்துக் கொண்டு பரப்பினால் மோடி சர்க்கார் இருக்கும் இடம் தெரியாமல் போய் விடுமே!!!
இன்று தெருக்களில் பலவிதமான கார்கள் ஓடுகின்றன. விமான சேவை சிறிய ஊர்களுக்கும் வந்து விட்டது. ஒரு காலத்தில் தொலைபேசி இணைப்புக்காக ஏழு வருடங்கள் காத்திருந்தவர்களும் உண்டு. இன்று தொலைபேசி கேட்டால் கிடைக்கும். இந்த சாதனைக்கு சொந்தக்காரர்கள் நேரு வம்சத்தினர் யாருமில்லை, அந்த குடும்பம் சாராத தென்னிந்தியரான பி.வி.நரசிம்ம ராவே காரணம். அவர், ஆந்திர மந்திரி சபையில் மந்திரியாக இருந்தவர், ஆந்திராவின் முதல் மந்திரியாக இருந்தவர். பின்னர் ஒரு இக்கட்டான சமயத்தில் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்ற பிரதமர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார். எத்தனை நாட்கள் அவர் தாக்குப்பிடிப்பார் என்பது காங்கிரஸ்காரர்களுக்கே சந்தேகமாக இருந்தது. ஒரு மைனாரிட்டி அரசை நடத்தி வந்த நரசிம்மராவ், புதிய பொருளாதாரக் கொள்கை மூலம் இந்தியாவுக்குப் பொருளாதார சுதந்திரம் பெற்றுத் தந்தார். அவரது சடலம் கூட காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லக்கூடாது என்று குறுக்கே நின்றவர் சோனியா.
தன் குடும்பத்தைப் பற்றி மட்டுமே பேசும் சோனியா, நரசிம்மாராவை நற்பணி செய்த பிரதமராக ஏன் கண்டுகொள்ளவில்லை? காரணம் இருக்கிறது, அவர் காலத்தில் சோனியாவுக்கு ஆட்சியிலும், கட்சியிலும் எந்த ஆதாயமும் கிடைக்கவில்லை. இப்போது, கட்சி, ஆட்சி, குடும்பம் எல்லாம் ஒன்றுதான் என்ற நிலைக்கு உயர்ந்து ஆட்சியையும் மட்டும் இழந்து கட்சியைக் குடும்பக் கட்சியாக வைத்துக் கொண்டிருக்கிறார். சோனியா எது பேசினாலும் அதில் அறிவாளித்தனம் இருக்கும் என்று எதிர்பார்க்க வேண்டாம். அவரைப் பற்றி பேசும்போது அறிவைப் பற்றி பேசுவது அநாவசியம்.
நன்றி: துக்ளக்
No comments:
Post a Comment