http://m.dinamalar.com/detail.php?id=2152809
ரஜினியுடன் சேர்ந்தால் பா.ஜ.,வுக்கு, 25 எம்.பி., மத்திய உளவுத்துறை, 'சர்வே'
வரும் லோக்சபா தேர்தலில்,நடிகர் ரஜினியுடன், பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிட்டால், 25 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு இருப்பதாக, மத்திய உளவுத் துறை எடுத்துள்ள, 'சர்வே' முடிவில் தெரிய வந்துள்ளது.
சமீப காலமாக, அரசியல் தொடர்பாக, ரஜினி தெரிவிக்கும் கருத்து களுக்கு, தமிழக பா.ஜ., தலைவர்கள், ஆதரவு அளித்து வருகின்றனர். பா.ஜ.,வுக்கு ஆதரவாகவே, ரஜினியும் பேசி வருகிறார். அடுத்த சட்டசபை தேர்தலுக்குள், கட்சி துவக்குவதாக, ரஜினி அறிவித்திருந்தா லும், லோக்சபா தேர்தலுக்கு முன், ரஜனி கட்சி துவக்குவார் என்ற எதிர்பார்ப்பு, பா.ஜ.,வினரிடம் உள்ளது.
சமீபத்தில், 'பா.ஜ., ஆபத்தான கட்சியா' என்ற கேள்வியை,ரஜினியிடம் நிருபர்கள் எழுப்பினார்.அதற்கு அவர், 'எதிர்க்க்கட்சிகள் அப்படி நினைத்தால், பா.ஜ., அவர்களுக்கு ஆபத்தான கட்சியாக தான் இருக்க முடியும். பத்து பேர் இணைந்து, ஒருவரை எதிர்த்து போரிட்டால், யார் பலசாலி என்பதை,
அனைவரும் புரிந்துகொள்ள முடியும்' என்றார். பிரதமர் மோடியை, பலசாலி என, ரஜினி தெரிவித்து உள்ள நிலையில், அவருடன் கூட்டணி அமைத்து, லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால், பா,ஜ., வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என, 39 தொகுதி களில், மத்திய உளவுத் துறை தரப்பில், சர்வே எடுக்கப்பட்டுள்ளது.
அந்த சர்வே முடிவில், 25 தொகுதிகளில், ரஜினி - பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என, குறிப்பிடப்பட்டுஉள்ளது.இதுகுறித்து, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தலில், நாடு முழுவதும், பிரதமர் மோடியின் சாதனைகளை பிரசாரம் செய்ய, பா.ஜ., திட்டமிட்டுள்ளது. தென் மாநிலங்களில், இந்த முறை, பா.ஜ.,வுக்கு அதிக எம்.பி.,க்கள் கிடைப்பதற்கான வியூகத்தை, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா அமைத்துள்ளார்.
லோக்சபா தேர்தலில், ரஜினியுடன் பா.ஜ., கூட்டணி அமைத்து போட்டியிடும் போது, மோடி, ரஜினி என, இரண்டு வசீகர பிம்பத்தால், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு ஆதரவு அலை வீசும் என, அமித் ஷா, கணக்குபோட்டுள்ளார்.மேலும், மத்திய உளவுத்துறை தரப்பில் எடுக்கப்பட்டுள்ள, சர்வே ரிப்போர்ட்டும், ரஜினிக்கு ஆதரவாக உள்ளது.
அந்த அறிக்கையில், பெண்கள் மத்தியில், ரஜினிக்கு, 50 சதவீதம் ஆதரவு உள்ளது என்றும், தஞ்சாவூர், ராமநாதபுரம் லோக்சபா தொகுதிகளில், தி.மு.க., - அ.ம.மு.க., - ரஜினி இடையே மும்முனைப்போட்டி
ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும், கோவை, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, நாமக்கல் போன்ற லோக்சபா தொகுதிகளில், அ.தி.மு.க., - தி.மு.க., - ரஜினி என, மும்முனைப் போட்டி நிலவும். தர்மபுரி, ஆரணி தொகுதி களில், பா.ம.க., - ரஜினி - தி.மு.க., மும்முனைப் போட்டி உருவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மற்ற, 30 லோக்சபா தொகுதிகளில், 25ல், ரஜினி - தி.மு.க., இடையே தான் போட்டி. அதில், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட, ஐந்தில் மட்டும், தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெறும். மற்ற, 25 தொகுதிகள், ரஜினி - பா.ஜ., கூட்டணிக்கு சாதகமாக உள்ளதாக, சர்வே ரிப்போர்ட்டில் குறிப்பிடப்பட்டுஉள்ளது.இவ்வாறு, அக்கட்சி வட்டாரங்கள் கூறின.
- நமது நிருபர் -
No comments:
Post a Comment