இந்தியாவின் வெற்றி!
By ஆசிரியர் | Published on : 05th December 2018 01:48 AM | அ+அ அ- | http://images.dinamani.com/images/FrontEnd/images/instagram.pngதினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்
ஆர்ஜென்டீனா தலைநகர் பியூனஸ் அயர்ஸில் கூடிய ஜி-20 நாடுகளின் கூட்டத்தில் இந்தியா பெரிய அளவிலான வெற்றியை அடைந்திருக்கிறது. தப்பியோடும் பொருளாதாரக் குற்றவாளிகள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிவிடாமல் இருப்பதற்கான சர்வதேசச் சட்டம் கொண்டுவரப் பட வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த சனிக்கிழமை நடந்த ஜி-20 மாநாட்டின் இரண்டாவது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி ஒன்பது அம்சத் திட்டத்தை முன்மொழிந்தார். குற்றச் செயல்களின் மூலம் சம்பாதித்த சொத்துகளை முடக்குவது, அவற்றை குற்றவாளியின் நாட்டுக்குத் திருப்பி அனுப்புவது உள்ளிட்ட ஒன்பது அம்சத் திட்டத்தை வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடியின் கருத்துக்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. பிரிட்டன் உள்ளிட்ட சில நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஜி-20 மாநாட்டின் தீர்மானத்தில் இந்தியாவால் அந்த அம்சங்களை சேர்க்க முடிந்திருக்கிறது.
இந்தியா இந்தப் பிரிவுகளை முன்மொழிந்ததற்குக் காரணம் இருக்கிறது. விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோர் தங்களது சொத்துகளை வெளிநாடுகளுக்குக் கொண்டு சென்றது மட்டுமல்லாமல், இந்திய வங்கிகளில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த பிறகு அயல் நாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். இவர்களை இந்தியாவுக்குத் திருப்பிக் கொண்டுவரப் போதுமான சர்வதேச சட்டங்கள் இல்லாமல் இருப்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவு.
பிரதமர் முன்மொழிந்த ஆலோசனைகளில், தீவிரவாதத்திற்குப் பண உதவி செய்யும் நபர்களையும் நாடுகளையும் அடையாளம் கண்டு, தடுப்பதற்கான செயல்திட்டமும் ஒன்று. தப்பியோடும் பொருளாதாரக் குற்றவாளிகள் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வது, அவர்களைக் கைது செய்து அவரவர் நாட்டு சட்டத்தின் முன்நிறுத்த சர்வதேசக் கூட்டுறவை ஏற்படுத்துவது, தப்பியோடிய குற்றவாளிகளைத் திருப்பிக் கொண்டு வருவதற்கான வழிமுறைகளில் காணப்படும் ஓட்டைகளை அடைப்பது, இதுகுறித்த அனுபவங்களை ஜி-20 நாடுகளுக்கிடையே பகிர்ந்து கொள்வது உள்ளிட்டவையும் இந்தியாவின் பரிந்துரைகள். அவை ஏற்றுக்கொள்ளப் பட்டிருக்கின்றன.
இவை மட்டுமல்லாமல், இந்தியா முன்வைத்த மேலும் பல கோரிக்கைகளையும் ஜி-20 நாடுகளை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறார் பிரதமர். சர்வதேச சுகாதார அமைப்பில் ஆங்கில மருத்துவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவிலும் சீனாவிலும் உள்ள பாரம்பரிய மருத்துவ முறைகள் ஜி-20 நாடுகளால் அங்கீகரிக்கப்படாத நிலைமை தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் பாரம்பரிய மருத்துவ முறைகளுக்கும் சர்வதேச அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை ஜி-20 நாடுகள் ஏற்றுக்கொண்டிருக்கின்றன.
இயற்கைப் பேரிடர் ஏற்படும்போது அயல்நாடுகள், அதிலும் குறிப்பாக வளர்ச்சி அடைந்த நாடுகள் பொருளாதார உதவியும், பொருள்களை அனுப்பியும் உதவி செய்வது வழக்கம். இவை மட்டுமல்லாது இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பு வசதிகளில் வளர்ச்சி அடைந்த நாடுகள் முதலீடு செய்து உதவ வேண்டும் என்பது இந்தியா முன்வைத்திருக்கும் யோசனை. அதேபோல, வேறு நாட்டில் வேலை செய்துவிட்டு தாய் நாட்டுக்குத் திரும்பும்போது, வேலை செய்த நாட்டில் அவர்களுக்குத் தரப்பட்ட சமூகப் பாதுகாப்பும் பயன்களும் அவர்களது தாய் நாட்டிலும் தொடர வேண்டும் என்கிற இந்தியாவின் கோரிக்கையையும் ஜி-20 மாநாடு ஏற்றுக் கொண்டிருக்கிறது.
ஜி-20 என்பது சர்வதேச அளவிலான ஓர் அமைப்பு. 1999-ஆம் ஆண்டு சர்வதேசப் பொருளாதார ஸ்திரத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான கொள்கைகளை விவாதிப்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. 2008-இல் ஜி-20 கூட்டமைப்பு விரிவுபடுத்தப்பட்டு, புதிய அம்சங்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டன. ஆண்டுதோறும் உறுப்பு நாடுகளின் பிரதமர் அல்லது அதிபர் மட்டுமல்லாமல், நிதியமைச்சர்கள், வெளியுறவு அமைச்சர்கள் ஆகியோரும் கலந்து கொள்வதால் இந்த மாநாட்டின்போது இரு தரப்புப் பேச்சுவார்த்தைகளும் நடைபெறுவது வழக்கம். உலகப் பொருளாதாரத்தில் ஐந்தில் நான்கு பங்குக்கும் அதிக அளவு ஜி-20 நாடுகளின் பங்களிப்பு என்பதால், சர்வதேச பொருளாதார நிலைமை குறித்து விவாதிப்பதில் ஜி-20 மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.
பியூனஸ் அயர்ஸில் நடந்து முடிந்த ஜி-20 மாநாடு இந்தியாவைப் பொருத்தவரை மிகப்பெரிய வெற்றி என்றுதான் கூறவேண்டும். இந்தியாவின் பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது மட்டுமல்லாமல், இந்த மாநாட்டில் ஒன்றோடு ஒன்று சேராத அணிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு சந்திப்புகளை மேற்கொண்டார்.
ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடனும், சீன அதிபர் ஷி ஜின்பிங்குடனும் பிரதமர் நடத்திய முத்தரப்புப் பேச்சுவார்த்தை கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா நடத்தியிருக்கும் இரண்டாவது சந்திப்பு. அதேபோல, முதன்முறையாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடனும் , ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயுடனும் ஜி-20 மாநாட்டின் போது பிரதமர் முத்தரப்புப் பேச்சு வார்த்தையை நடத்தியிருக்கிறார். சீனா - ரஷியா, அமெரிக்கா - ஜப்பான் இரண்டு அணிகளுக்குமிடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவும் வேளையில், இந்தியாவால் அந்த இரண்டு அணிகளுடனும் தனித்தனியாக முத்தரப்புப் பேச்சு வார்த்தை நடத்த முடிந்திருப்பது மிகப்பெரிய சாதனை.
எந்தவோர் அணியுடனும் முற்றிலுமாக இணைந்துவிடாமல், இந்தியாவின் நலன் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டிருப்பது வரவேற்புக்குரியது
No comments:
Post a Comment