காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்!
.
5 மாநிலத் தேர்தல் முடிவுகள்- எனது பார்வை.
-வமுமுரளி
நாடு முழுவதும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஐந்து மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. 5-இல் 3 மாநிலங்களில் (ம.பி, ராஜஸ்தான், சத்தீஸ்கர்) வென்று காங்கிரஸ் தனது மதிப்பை மீட்டிருக்கிறது. பழம்பெரும் காங்கிரஸ் கட்சிக்கு நல்வாழ்த்துகள். அதன் தலைவரும் தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துச் சென்றவருமான ராகுல் காந்திக்கும் வாழ்த்துகள்!
தெலுங்கானாவில் தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. மிஸோரமில் மிஸோ தேசிய முன்னணி ஆட்சியைப் பிடிக்கிறது. இவ்விரு கட்சிகளுக்கும் வாழ்த்துகள்!
தேர்தல் வாக்குப் பதிவின் மூலமாக அமைதியான முறையில் ஆட்சி மாற்றத்தை உருவாக்க்குவதே ஜனநாயக முறையின் சிறப்பு. நம்ம்முடன் சுதந்திரம் பெற்ற நாடுகளில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு அங்கு நிலவும் தேர்தல் குழப்பங்களும் ஒரு காரணம். ஆனால், கடந்த 71 ஆண்டுகளாக நாம் தேர்தல் முறைகளில் பண்பட்டு வந்திருக்கிறோம். அதன் விளைவே சாதாரண மனிதரும் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட முடியும் என்பதை உணர்ந்திருப்பது. ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள் காட்டுவது இதையே.
காங்கிரஸ் வென்ற மூன்று மாநிலங்களில், மத்திய பிரதேசத்திலும் சத்தீஸ்கரிலும் பாஜக நீண்ட நாட்களாக ஆட்சியில் இருந்து வந்திருக்கிறது. அக்கட்சிக்கு அந்த மாநிலங்களின் மக்கள் அதீத ஆதரவு தெரிவித்து வந்திருக்கிறார்கள். ராஜஸ்தானில் மட்டுமே தேர்தல் தோறும் ஆட்சி மாற்றம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. ஆட்சிக்கு எதிரான அதிருப்தி நிலவுகையில் தேர்தல் முறை மக்களுக்கு ஆசுவாசமான வாய்ப்பை வழங்குகிறது. அதனால் தான் இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. மிஸோரமில் காங்கிரஸ் கட்சியும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. தெலுங்கானாவைப் பொருத்த வரை, அம்மாநிலத்தை உருவாக்கப் போராடிய கட்சி டி.ஆர்.எஸ். என்பது மறுக்க முடியாத உண்மை. அதன் பலனையே அக்கட்சி இப்போதும் பெற்றிருக்கிறது.
ம.பி.யில் சிவராஜ் சிங் சௌஹானும், சத்தீஸ்கரில் ரமண் சிங்கும், ராஜஸ்தானில் வசுந்தராப் ராஜி சிந்தியாவும் பாஜகவின் அடையாளமாக வில்ங்கினார்கள். பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோரின் வலிமையான பிரசாரமும் அவர்களுக்குப் பின்புலமாக இருந்தது. உள்கட்சி வலிமை அடிப்படையில் பாஜகவின் அருகில் கூட தற்போதைய காங்கிரஸ் கட்சியால் நெருங்க முடியாது. இத்தனையையும் மீறி இந்த மாநிலங்களில் காங்கிரஸ் வென்றிருப்பதை நிச்சயம் பாராட்டியாக வேண்டும். காங்கிரஸ்காரர்கள் மகிழ வேண்டிய நேரமே.
அதே சமயம், பாஜக படுதோல்வி அடைய என்பதை அதன் எதிர்ப்பாளர்கள் மறந்துவிடக் கூடாது.மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி புரிவதால் ஆட்சிக்கு எதிரான அதிருப்தி பல மடங்காகப் பெருக இந்த மூன்று மாநிலங்களிலும் அதிக வாய்ப்புகள் இருந்தன. நிதர்சனத்தில் பாஜக இம்மாநிலங்களில் மிக மோசமான தோல்வியைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், பாஜகவின் உறுதியான தலைமை, நேர்த்தியான தேர்தல் அணுகுமுறை, மோடி, ஷா, யோகி ஆகியோரின் தீவிர பிரசாரம் ஆகிய காரணங்களால் பாஜக இறுதி வரை போராடி சம வாய்ப்புள்ள எதிர்க்கட்சியாக இருந்திருக்கிறது. இந்த மூன்று மாநிலங்களிலும் பெருத்த அளவில் ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. எனினும் மக்கள் மாற்றத்தை விரும்பும்போது அதை ஏற்றாக வேண்டும்.
இந்த ஐந்து மாநிலத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்லாத சில கட்சிகள் இருக்கின்றன. அவை நடத்தும் ஆர்ப்பாட்டமும் அமர்க்களும் தான் நகைச்சுவையாக இருக்கிறது. ஐந்து மாநிலங்களிலுமே வென்ற கட்சிகள் காங்கிரஸும் பாஜகவும் தான். இவ்விரு கட்சிகளுக்கு மட்டுமே நாட்டை ஆளும் தகுதி உள்ளது என்பதும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இனிமேல் மூன்றாவது அணி கொடியுடன் இடதுசாரிகள் நர்த்தனம் ஆட மாட்டார்கள் என நம்பலாம்.
விரைவில் நடைபெறவுள்ல நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் அரையிறுதி ஆட்டமாகவும் இத்தேர்தல் வர்ணிக்கப்பட்டது. இந்தப் போட்டியில் வென்று காங்கிரஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளும் வாய்ப்பு பாஜகவுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்து விரிவாக நாளை பார்ப்போம்.
அதே சமயம், பாஜகவின் தோல்விகளைக் கண்டு கெக்கலி கொட்டுவோருக்கு சொல்லிக்கொள்ள ஒன்று உண்டு. 1984-இல் 2 எம்.பி.க்கள் மட்டுமே கொண்டிருந்த பாஜக 1998, 1999, 2014 நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆட்சியைப் பிடித்தது. இப்போதும் 13 மாநிலங்களில் ஆட்சி நடத்துகிறது. வெற்றியும் தோல்வியும் வீரனுக்கு அழகு. களத்திலேயே இல்லாதவர்கள் வீரர்களை இகழக் கூடாது.
இந்தச் சறுக்கலையும் சாதுரியமாகப் பயன்படுத்தி பாஜகவை வெற்றி இலக்கு நோக்க்கிக் கொண்டுசெல்ல அங்கு ஒரு அர்ப்பணிப்பான படை உள்ளது. இதை காங்கிரஸ் கட்சியும் மறந்துவிடக் கூடாது.
No comments:
Post a Comment