Wednesday, 26 December 2018

35 நாள்களில் 3 செயற்கைக்கோள்களை அனுப்பி இந்திய விண்வெளித்துறை சாதனை


http://www.kathirnews.com/2018/12/21/3-satellites-in-35-days/
.

35 நாள்களில் 3 செயற்கைக்கோள்களை அனுப்பி இந்திய விண்வெளித்துறை சாதனை : இஸ்ரோ தலைவர் கே.சிவன் பெருமிதம்.

ஜிசாட்-7ஏ இந்தியா கடந்த 35 நாள்களில் அனுப்பப்பட்டுள்ள மூன்றாவது தகவல்தொடர்பு செயற்கைக்கோள் திட்டமாகும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் பெருமிதத்துடன் கூறினார்.

இந்திய விமானப் படைக்கு உதவக் கூடிய ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் ஜி.எஸ்.எல்.வி.-எப்11 ராக்கெட் மூலம் புதன்கிழமை விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அதன் பிறகு இஸ்ரோ விஞ்ஞானிகள் மத்தியில் கே.சிவன் பேசியதாவது: ஜிசாட்-7ஏ செயற்கைக்கோள் திட்ட வெற்றி இஸ்ரோவுக்குக் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். இது இந்தியா சார்பில் கடந்த 35 நாள்களில் அனுப்பப்பட்டுள்ள மூன்றாவது தகவல்தொடர்பு செயற்கைக்கோள் திட்டமாகும்.

கடந்த நவம்பர் 14 இல் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3-டி2 ராக்கெட் மூலம் ஜிசாட்-29 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் திட்டமும், நவம்பர் 29 அன்று பி.எஸ்.எல்.வி.-சி43 ராக்கெட் மூலம் ஹைசிஸ் தகவல்தொடர்பு செயற்கைக்கோள் திட்டமும், இப்போது ஜிசாட்-7ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள் திட்டமும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளன.

இந்தத் திட்டத்தைப் பொருத்தவரை ஜி.எஸ்.எல்.வி.ராக்கெட், செயற்கைக்கோள் என இரண்டிலும் பல்வேறு மேம்பாடுகளை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. மூன்று நிலைகளைக் கொண்ட இந்த ராக்கெட்டின் இரண்டாவது நிலை எரிபொருள் நிரப்பும் திறன் 37.5 டன் என்ற அளவிலிருந்து 40 டன் அளவாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல கிரையோஜெனிக் நிலையில் எரிபொருள் நிரப்பும் திறன் 12 டன் எடை அளவிலிருந்து 15 டன் என்ற அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அதுபோல செயற்கைக்கோளிலும் அதிநவீன ஆன்டனாக்கள் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதுபோல புதிய தொழில்நுட்பங்கள் சேர்க்கப்பட்டிருப்பதால், நாங்கள் எதிர்பார்த்ததைகாட்டிலும் 2000 கிலோ மீட்டர் கூடுதல் தூரத்தில் செயற்கைக்கோளை நிலைநிறுத்த முடிந்துள்ளது. எனவே, இந்த வெற்றி இஸ்ரோவுக்கு மிக முக்கியமான வெற்றியாகும்.

அடுத்த ஆண்டு 32 திட்டங்கள்:

வருகிற 2019 ஆம் ஆண்டில் முக்கியமான பல ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் திட்டங்களை இஸ்ரோ செயல்படுத்த உள்ளது. ராக்கெட், செயற்கைக்கோள் திட்டங்கள் என மொத்தம் 32 திட்டங்களை 2019இல் செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது என்றார் சிவன்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...