பல கோடி செலவில் புதிய பாலம் அமைகிறது பாம்பன் தூக்குப்பாலம் அகற்ற திட்டம்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து துவங்கி 104 ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில், கடந்த டிச.4ம் தேதி தூக்குப்பாலத்தின் இரும்பு பீம்கள் வலுவிழந்ததால் விரிசல் ஏற்பட்டது. தற்காலிகமாக பொறியாளர்கள் குழு இதனை சீரமைத்துள்ளது. எனினும் கடந்த 6 நாளாக ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 2 பக்கமும் திறக்கும் ஷெர்ஜர் பாலத்தை (தூக்குப்பாலம்) அகற்றிவிட்டு, ஒரு பக்கம் மட்டும் செங்குத்தாக தூக்கும் வகையில் புதிய பாலம் அமைக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்து இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. இன்றுவரை அதற்கான பணிகள் துவங்கப்படவில்லை.மேலும் மின்சார ரயில்கள் இயக்கிடும் வகையில் பாம்பன் கடலில் புதிய ரயில் பாலம் கட்டும் திட்டமும் ரயில்வே துறையினரால் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. பாம்பன் கடல் பகுதியில் சமீபத்தில் இதற்கான ஆய்வு நடைபெற்றது. தூக்குப்பாலத்தில் விரிசலை சரிசெய்து ரயில் போக்குவரத்தை மீண்டும் துவக்கினாலும், அது தற்காலிக செயல்பாடாகத்தான் இருக்கும். அதனால் தூக்குப்பாலத்தை அகற்றி கப்பல் செல்ல புதிய பாலம் கட்டுவதைவிட, கப்பல்கள் செல்வதற்கு இடையூறின்றி பாம்பன் கடலில் மின்சார ரயில்கள் இயக்கும் வகையில், புதிதாக ரயில் பாலம் கட்டுவது குறித்து, நிதி ஒதுக்கீடு, கட்டுமானப்பணிகள் உள்ளிட்ட சாத்தியக்கூறுகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் தரப்பில் ஆய்வு செய்யப்படுகிறது.
பாம்பன் கடலில் தற்போதுள்ள ரயில் பாலத்திற்கு அருகிலேயே மண்டபம் - பாம்பன் இடையே நவீன வசதிகளுடன் கூடிய இந்த புதிய பாலம் கட்டி முடிக்கப்பட்டால், 104 ஆண்டுகளை கடந்த பழைய ரயில்வே தூக்குப் பாலம் முழுமையாக அகற்றப்படும்.மதுரை - ராமேஸ்வரம் இடையே தற்போதுள்ள அகலரயில்பாதையை ரூ.158 கோடி செலவில் மின்ரயில் பாதையாக மாற்றுவதற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த அக்.21 ம் தேதி ராமேஸ்வரம் வந்த ரயில்வே போர்டு உறுப்பினர் கான் ஷியாம்சிங் (இழுவை பிரிவு) மின்சார ரயில்பாதை முதன்மை பொறியாளர் சத்யநாராயணா ஆகியோர் பாம்பன் ரயில் பாலத்தில் மின்சார ரயில்கள் இயக்குவதற்கான வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தினர். அப்போது பாலத்தின் உயரம் குறைவாக இருப்பதாக கூறப்பட்டது. இதனால் புதிய பாலம் கட்டினால் மட்டுமே மின்சார ரயில்கள் இயக்குவதற்கான வாய்ப்புள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ரயில்வே துறையினால் இதற்கான நிதி ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் இரண்டு ஆண்டுகளில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது....
. 🐎Ⓜ🦅
*_┈┉┅━❀𝙶𝚄𝙻𝙵 𝙽𝙴𝚆𝚂❀━┅┉┈_*
No comments:
Post a Comment