கோவையில் மலிவு கட்டண மருத்துவமனை துவக்கம்
மத்திய அரசின், 'ஜன் அவ்ஷாதி கேந்திரா' திட்டத்தின் கீழ், தமிழகத்தின் முதல் மலிவு கட்டண மருத்துவமனை, கோவையில் துவக்கப்பட்டுள்ளது.சென்னைக்கு அடுத்தபடியாக, கோவையில் பல்நோக்கு மருத்துவமனைகள் அதிகமாகவுள்ளன.
சென்னையிலேயே இல்லாத சித்த மருத்துவம், ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த மருத்துவமனைகளும் இங்கு இருப்பதால், கோவை உயர் ரக சிகிச்சைக்கான மையமாக உருவெடுத்துள்ளது; மருத்துவம் சார்ந்த சுற்றுலா நகரமாக, கோவை பெயர் பெற்றுள்ளது.இருப்பினும், ஏழை மக்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு, கோவை அரசு மருத்துவமனையை விட்டால், வேறிடமில்லை என்ற நிலை உள்ளது.
இந்த கவலையைப் போக்கும் வகையில், மத்திய அரசின் மலிவு கட்டண மருத்துவமனை, தமிழகத்திலேயே முதன் முறையாக, கோவையில் துவக்கப்பட்டுள்ளது. பிரதமரின், 'ஜன் அவ்ஷாதி கேந்திரா' திட்டத்தின் கீழ், மலிவு விலையில் மருந்துகள் வாங்கும் திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்த மருத்துவமனைகள், நாடு முழுவதும் துவக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, இ.வி.எஸ்., நிறுவனம் சார்பில், மலிவு கட்டண மருத்துவமனை, கோவை சித்தாபுதுார், சரோஜினி வீதியில் துவக்கப்பட்டுள்ளது. போலீஸ் துணை கமிஷனர் பெருமாள், இதனை நேற்று துவக்கி வைத்தார். தேர்தல் பிரிவு துணை கலெக்டர் ராஜ்குமார், கோவை சுகாதாரத்துறை இணை இயக்குனர் சந்திரசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ரூ.50 கட்டணம்
ஆயிரத்து 500 சதுர அடியில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த இ.வி.எஸ்., மருத்துவமனையில், குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர், பொது மருத்துவர், நரம்பியல் நிபுணர், காது மூக்கு தொண்டை நிபுணர், நீரிழிவு நோய் நிபுணர், மகளிர் நோயியல் மற்றும் மகப்பேறியல் மருத்துவர், மூட்டு மற்றும் இருதய நோய் நிபுணர் என, ஆறு சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். நோயாளிகளுக்கான மருத்துவ கட்டணம், 50 ரூபாய் மட்டுமே.
காலை 8.30 முதல் மதியம் 1.30 மணி வரையும், மாலை 4.30 முதல் இரவு 9.30 மணி வரையில் நோயாளிக்கு சிகிச்சை வழங்கப்படும். ஸ்கேன் மற்றும் எக்ஸ்-ரே போன்ற வசதிகளுக்காக அருகில் உள்ள மருத்துவமனைகளுடன், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இங்கு, 'ஜன் அவ்ஷாதி' எனும் பெயரில் மருந்தகமும் உள்ளது. இதில், பொதுவான அனைத்து மருந்துகளும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. ஏழைகளுக்கும் உயர் சிகிச்சை, இனி எட்டும் கனியாகும்.
பல்நோக்கு மருத்துவமனை!
இ.வி.எஸ்., குரூப் நிர்வாக இயக்குனர் ஷிரில் கூறுகையில், ''இங்கு பதிவு கட்டணம், 50 ரூபாய் மட்டுமே என்பதால் பொது மக்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். துடியலூர், ரத்தினபுரி, சிங்காநல்லுார் மற்றும் பொள்ளாச்சி ஆகிய நான்கு இடங்களில் மருத்துவமனை திறக்க திட்டமிட்டுள்ளோம். மூன்று மாதங்களில் திறக்கப்படும். நவக்கரையில், 550 படுக்கைகளுடன் கூடிய, 'இ.வி.எஸ்., ஹெல்த் சிட்டி' எனும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை திறக்கும் திட்டமும் உள்ளது,'' என்றார்
-- நன்றி தினமலர்
No comments:
Post a Comment