An Interesting analysis
நேற்றைய தோல்விக்கு பிறகு பாஜக ஆதரவாளர்களுக்கு இரண்டு பெரிய கவலைகள் வந்து விட்டது.
1) காங்கிரஸ் முக்த பாரத் - அதாவது காங்கிரஸ் இல்லா பாரதம் என்று பெருமை அடித்து கொண்டீர்களே - இப்போ என்ன ஆச்சு என்று கேள்விகள்.
2) ஒரு வேளை பாஜக 2019 தேர்தலில் 200-220 க்குள் சுருங்கி விட்டால் என்ன செய்வது. அதன் பிறகு பாஜகவின் எதிர்காலம் என்ன என்ற கவலை வேறு சிலருக்கு.
இதற்கு விடை அளிக்கும் பதிவு தான் இது.
பாஜகவின் எதிர்காலம் உண்மையில் பிரகாசமாக தான் இருக்கிறது. அது எப்படி மூன்று பெரிய மாநிலங்களை இழந்த பிறகும் இப்படி சொல்ல முடிகிறது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அதற்கு சாட்சி கீழே உள்ள படம் தான். பள்ளி / கல்லூரிகளில் நாம் பார்த்திருக்கும் இந்த Graphக்கும் பாஜகவுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்க கேட்கலாம். சம்பந்தம் இருக்கு.
ஒரு கட்சி ஒரு தேர்தலில் வெற்றி பெறுகிறது. அடுத்த தேர்தலில் தோல்வி அடைகிறது. அதற்கு அடுத்த தேர்தலில் மீண்டும் வெற்றி. இது எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். ஆனால் ஒரு கட்சி வளர்கிறதா தேய்கிறதா என்பதை எது நிர்ணயம் செய்கிறது? முந்தைய வெற்றியில் கிடைத்த இடங்களுக்கும் இப்போதைய வெற்றியின் போது கிடைத்த இடங்களுக்குமான வேறுபாடு தான் .அதே போன்று தான் தோல்வியும். இப்போதைய தோல்வி முந்தைய தோல்வியை விட மோசமாக இருக்கிறதா என்பது தான். இதற்கான உதாரணத்தை பார்ப்போம்.
முதலில் காங்கிரஸ் கட்சியின் வெற்றி தோல்விகளை அலசுவோம்.
சுதந்திர இந்தியாவில் நடந்த தேர்தல்களில் ராஜீவ் காந்தி தான் காங்கிரஸ் சார்பில் மிக அதிக இடங்களில் வெற்றி பெற்றார். அவர் வெற்றி பெற்ற இடங்கள் 410. சுதந்திரம் கிடைத்த 5 ஆண்டுகளில் காங்கிரசிற்கு எதிர்க்கட்சியே இல்லை என்கிற நிலையில் ஆட்சி செய்த நேருவுக்கு கூட இவ்வளவு கிடைக்கவில்லை. 5 ஆண்டுகள் கழித்து 1989 நடந்த தேர்தலில் காங்கிரசிற்கு கிடைத்த சீட்டுகள் 197. 200க்கும் மேலான தொகுதிகளில் தோற்றதால் தனிப்பெரும் கட்சி என்கிற அளவிற்கு வெற்றி பெற்றும் கூட கூட்டணி ஆட்சி அமைக்க மறுத்து விட்டார் ராஜீவ்.
ராஜீவ் இறந்து அதன் பிறகு வந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற இடங்கள் 224. நரசிம்ம ராவ் அவர்களின் 5 ஆண்டு ஆட்சிக்கு பிறகு காங்கிரஸ் 1996 தேர்தலில் வெற்றி பெற்ற இடங்கள் 145. இந்த 145 ஐ மனதில் இறுத்தி கொள்ளுங்கள். இந்த நம்பருக்கு மீண்டும் வருகிறேன்.
1998, 1999 தேர்தல்களில் வாஜ்பாய் அவர்களின் தலைமையில் பாஜக ஆட்சி செய்கிறது. 1999 தேர்தலில் 182 வாங்கி வெற்றி பெற்ற பாஜக, 2004 தேர்தலில் வெறும் 137 மட்டுமே வாங்கி தோல்வி அடைகிறது. அதனால் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைகிறது. அப்போது காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகள் எத்தனை தெரியுமா - 145. எந்த 145? நரசிம்மராவ் படுதோல்வி அடைந்து வாங்கிய அந்த 145.
அதற்கு அடுத்த தேர்தலில் (அதாவது 2009) காங்கிரஸ் கட்சி வாங்கிய இடங்கள் - 206. அதாவது 1989 தேர்தலில் ராஜீவ் தோல்வி அடைந்த போது வாங்கிய 197 க்கு அருகாமையிலான சீட்டுகள். இப்போது உங்களுக்கு புரிகிறதா? எந்த நம்பர்கள் வாங்கியதால் ராஜீவும் நரசிம்மராவும் தோல்வி அடைந்ததாக கருதப்பட்டு ஆட்சி அமைக்க முடியவில்லையோ அதே நம்பர்களை வைத்து ஆட்சி அமைக்க வேண்டிய கட்டாயம் சோனியா காலத்து காங்கிரசிற்கு ஏற்பட்டது. அதற்கு அடுத்த தேர்தலான 2014 - ல் காங்கிரசிற்கு வரலாறு காணாத அளவுக்கு வெறும் 44 இடங்கள்.
இப்போது 2019 க்கு வருவோம் - எத்தனை முக்கி முனகினாலும் காங்கிரசுக்கு அதிக பட்சமாக எத்தனை கிடைக்கும் - வெறும் 115 - 120 தான். ஒரு வேளை பாஜக படுதோல்வி அடைந்து காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைத்தால் கூட இவ்வளவு தான் தேறும். இதற்கு மேல் தேறாது.
இப்போது பாஜகவிற்கு வருவோம்.
1985 தேர்தலில் வெறும் 2 இடங்களுடன் கணக்கை துவக்கிய பாஜக அதன் பிறகு ஏறுமுகமாகவே சென்று 1991 - 115, 1996 - 160, 1998 - 182, 1999 - 182 என்று 2004 தேர்தலில் தோல்வி அடையும் வரை அதிக பட்சமான 182 ஐ தொட்டது. 2009 - ல் தோல்வி மீண்டும் தோல்வி அடைந்த போது கிடைத்த சீட்டுகள் - 115. எந்த 115? அத்வானி அவர்கள் தலைமையில் ராஜீவ் கொலையினால் ஏற்பட்ட அனுதாப அலையினையும் தாண்டி 1991 தேர்தலில் வெற்றி பெற்ற அந்த 115.
சரி இப்போது - 2019 க்கு வருவோம். பாஜகவிற்கு படுதோல்வி என்று வைத்து கொண்டாலும் எத்தனை கிடைக்கும்? குறைந்த பட்சம் 190 - 200. அதாவது வாஜ்பாய் காலத்து பாஜக வாங்கிய அதிக பட்ச இடங்கள். அதாவது எந்த நம்பர் வாஜ்பாய் அவர்களின் வெற்றி என்று கருதப்பட்டதோ அதே நம்பர் மோடி அவர்களின் தோல்வி என்று கருதப்படும்.
இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். பாஜகவின் ஒவ்வொரு தோல்வியின் அளவுகளும் முந்தைய தோல்வியின் அளவுகளை விட கணிசமாக ஏறி வருகிறது. அதே போன்று காங்கிரசின் வெற்றியின் அளவுகள் முந்தைய தேர்தலில் பெற்ற வெற்றியின் அளவை விட கணிசமாக குறைந்து வருகிறது. அதனால் பாஜகவின் எதிர்காலம் குறித்து கவலை கொள்ள தேவை இல்லை.
அப்படியென்றால் மோடி வரமாட்டாரே என்று நீங்கள் கேட்கலாம். Cometh the hour, cometh the man என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். மோடி அவர்கள் தோல்வி அடைந்தாலும் சங்கம் நிறைய மோடிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. அதனால் பாஜகவின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதாகவே கருதுகிறேன்.
அதே போன்று தான் காங்கிரஸ் இல்லா பாரதமும். காங்கிரஸ் ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் நாட்டில் முழுவதும் வந்தாலே காங்கிரஸ் இல்லா பாரதம் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள். ஒரு வேளை இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக வெற்றி பெறுகிறது என்றே வைத்து கொள்வோம். அதனால் காங்கிரஸ் இல்லா மாநிலம் என்று சொல்ல முடியுமா? காங்கிரஸ் எதிர்க்கட்சி என்கிற ரூபத்தில் இருக்கிறதே. அப்படியென்றால் காங்கிரஸ் இல்லா மாநிலம் என்பது எது? காங்கிரசால் நிச்சயம் ஆட்சியே அமைக்க முடியாத மாநிலங்கள் - தமிழகம், ஒரிஸ்ஸா, சீமாந்திரா, பீகார், உபி, மேற்கு வங்கம், போன்ற மாநிலங்கள். அப்படி நடக்க வேண்டுமென்றால் இப்போது பாஜக தோற்ற மாநிலங்களில் பாஜகவுக்கு மாற்றாக காங்கிரசிற்கு பதிலாக மாநில கட்சிகள் ஏதேனும் இருக்க வேண்டும். ஆனால் காங்கிரஸ் ஒரேயடியாக அழிந்து பாஜகவிற்கு மாற்றாக மாநில கட்சிகள் வந்தால் மத்தியில் குழப்பமே ஏற்படும். விபி சிங், சந்திரசேகர், தேவகவுடா, குஜரால் போன்ற ஆட்சிகள் வந்து நிலையற்ற தன்மை ஏற்படும். அதனால் மபி, ராஜஸ்தான், குஜராத், ஹிமாச்சல், போன்ற மாநிலங்களில் பாஜகவுக்கு மாற்றாக அவ்வபோது காங்கிரஸ் வெற்றி பெறுவதில் தவறு இல்லை
Krishnan SK
No comments:
Post a Comment