Monday, 12 November 2018

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் தரங்கெட்டு மிகவும் கீழ்த்தரமாக சென்று கொண்டிருக்கின்றன.

என்ன நடக்கிறது இங்கே?!!!
சமீபகாலமாக தமிழ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள்  தரங்கெட்டு மிகவும் கீழ்த்தரமாக சென்று கொண்டிருக்கின்றன. பெண்களை கவர்ச்சியாகவும், ஆபாசமாகவும், கொச்சையாகவும் காட்டும் நிகழ்ச்சிகள் பெருகி வருகின்றன. குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு ஆபாசமாக இருக்கின்றன. பெண்களை போகப்பொருளாக காட்டுவதும், இரட்டை அர்த்த வசனங்கள் பேசுவதுமாக மிகக் கேவலமாக சென்றுகொண்டிருக்கின்றன. இதை ஆரம்பித்து வைத்தது விஜய் டிவி என்றால் அது மிகையாகாது. விஜய் டிவியின் நிகழ்ச்சிகளை பார்த்து மற்ற தொலைக்காட்சிகளும் அதேபோல் ஆரம்பித்துவிட்டன. சன் டிவி இப்போது ஒருபடி மேலே சென்று கொண்டிருக்கிறது. பெரும்பாலான நிகழ்ச்சிகள்  பெண்களின் கவர்ச்சியை நம்பி மட்டுமே எடுக்கப்படுகின்றன.  தற்போது சன் டிவியில் கிராமத்தில் ஒரு நாள் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதை பார்ப்பவர்களுக்குத் தெரியும், பெண்களை அதில் எப்படி காண்பிக்கின்றனர் என்று. அதேபோல் மற்ற நிகழ்ச்சிகளிலும் பெண்களை வக்கிரமாகவே காண்பிக்கின்றனர். இதெல்லாம் போதாதென்று இப்போது புதிதாக ஒரு நிகழ்ச்சி வரப்போகிறது. நிகழ்ச்சியின் பெயர் சொப்பன சுந்தரி. இதுவரை வந்த நிகழ்ச்சிகளையெல்லாம் ஓரம் கட்டும் அளவுக்கு இந்நிகழ்ச்சி உள்ளது. அதாவது மாடல்களை தேர்வு செய்யும் நிகழ்ச்சியாக, சன் டிவியின் சன் லைஃப்(sun life) தொலைக்காட்சியில் இது ஒளிபரப்பாக உள்ளது. நிகழ்ச்சியின் முன்னோட்டத்தை பார்த்தால் அடல்ஸ் ஒன்லி நிகழ்ச்சி போல் உள்ளது. பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் மிகவும் வக்கிரமாக வருகின்றனர்.  தென்னிந்தியாவிலேயே தமிழ்நாட்டில் முதன்முறையாக இதுபோன்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. வட இந்தியாவில் இது போன்ற நிகழ்ச்சிகள் வந்து கலாச்சாரத்தை கெடுத்தது போதாதென்று, இப்போது தென்னிந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் ஒளிபரப்பாக உள்ளது. தென்னிந்தியாவின் குறிப்பாக தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த கலாச்சாரத்தையும் சீரழிக்க முடிவு செய்துவிட்டார்கள். இங்கு பெண்களின் திறமைகளை நம்பி நிகழ்ச்சிகள் எடுக்கப்படுவதில்லை.  அவர்களின் கவர்ச்சியை நம்பியே எடுக்கப்படுகிறது. இதற்கெல்லாம் மாதர் சங்கங்களும் பெண்ணியவாதிகளும் குரல் கொடுக்காதது ஏன் என்று தெரியவில்லை. இதைப்பார்த்தால், அவர்கள் குரல் கொடுப்பதெல்லாம் அவர்களின் சுய விளம்பரத்திற்கான விஷயங்களில் மட்டும் தானோ என்று சந்தேகிக்க வைக்கிறது. அவர்களுக்கு பெண்களின் மேலும், பெண்களின் முன்னேற்றத்தின் மேலும் உண்மையான அக்கறை இருப்பதாக தெரியவில்லை. சன் டிவியின் சன் லைஃப் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகப்போகும் இந்த நிகழ்ச்சி இத்துடன் நிற்கப்போவதில்லை. இதைப் பார்த்து மற்ற தொலைக்காட்சிகளும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை தயாரிக்கும். நிகழ்ச்சி நிகழ்ச்சியோடு நின்றுவிட்டால் பரவாயில்லை.  இதன் தாக்கம் நம் சமுதாயத்திலும் ஊடுருவும்.  பெண்களை மாடலிங் துறையில் ஆர்வம் கொள்ள வைக்கும். யார் எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று நாம் நினைத்தால், நம் வீட்டுப் பெண்களையும் அந்த ஆசை விட்டுவைக்காது. நம் குடும்பத்திற்குள்ளேயே அந்த கலாச்சாரம் பரவும். பெண்களிடம், "அவர்களுடைய உடை அவர்கள் சுதந்திரம்" என்று கூறி, அவர்கள் கவர்ச்சி காட்டுவதை மறைமுகமாக ஆதரித்து, அவர்களின் திறமையை மறைத்து, அவர்களை ஒரு போகப் பொருளாகவே பார்க்கும்படி சதி செய்கின்றனர். தமிழ்நாட்டை அமைதிப்பூங்கா என்பார்கள். இங்கு கிடைக்கும் நிம்மதியான வாழ்க்கை, வேறு எந்த மாநிலத்திலும் கிடைக்காது. அதற்கு காரணம் நம் கலாச்சாரமே. அந்த கலாச்சாரத்தை அழிப்பதில் இன்று தமிழ் தொலைக்காட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன். தங்களின் கேவலமான டிஆர்பி(TRP)யை ஏற்றிக் கொள்வதற்கும், நிகழ்ச்சியை பிரபலப்படுத்துவதற்கும், பணம் சம்பாதிப்பதற்கும் நமது கலாச்சாரத்தை பற்றி சற்றும் யோசிக்காமல் தங்கள் இஷ்டம்போல் நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன. இதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்வது இல்லை. அதுதான் அவர்களின் மிகப்பெரிய பலம். நாம் இதை சிறிய விஷயமாக நினைத்து கடந்துபோவதால் தான் அவர்கள் தொடர்ந்து இதுபோன்ற நிகழ்ச்சிகளை தயாரித்து கொண்டிருக்கின்றனர். இனியும் நாம் இதை சாதாரணமாக கடந்துவிட்டால், தமிழ்நாடு கெட்டு சீரழிந்து, நிம்மதியிழந்து, அமைதிப் பூங்கா என்ற நிலைமை மாறக்கூடிய சூழ்நிலை உண்டாகும். சமூக அக்கறை கொண்ட நல்ல உள்ளங்கள் ஒன்றுதிரண்டு, தமிழ்நாட்டை,  இதுபோன்ற தீயசக்திகளிடமிருந்து காப்பாற்ற வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு உடனடி தடை வேண்டும். இளைஞர்கள் அனைவரும் தமிழ்நாட்டின், தமிழ் மக்களின், நமது குடும்பங்களின் நலன் கருதி இந்நிகழ்ச்சிக்கு எதிராக அணிதிரள்வோம். நிகழ்ச்சிக்கு தடை வரும் வரை சட்டத்திற்கு உட்பட்டு மிகப்பெரிய அளவில் போராடுவோம்.
     (தயவுசெய்து முடிந்தவரை அனைவருக்கும் வேகமாக பகிரவும்)

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...