🔱🔱🚩
பக்தனே பெரியவன்
ஒருமுறை புலவர்களிடையே உலகிலேயே யார் பெரியவர் என்ற சர்ச்சை ஏற்பட்டது. உலகம் தான் பெரியது, நாடாளும் மன்னனே பெரியவன், கடவுளே பெரியவர்...என்று ஆளுக்கொன்றாக சொன்னார்கள். அப்போது அவ்வையார் அங்கு வந்தார். அவர் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
-
“புலவர்களே! நீங்கள் சொல்வது போல உலகம் பெரியது தான். ஆனால், அந்த உலகத்தையே படைத்ததால் பிரம்மா பெரியவராகிறார். அதே நேரம் அந்த பிரம்மா, திருமாலின் தொப்புள் கொடியில் பிறந்தவர். இதனால் திருமால் பெரியவர் ஆகிறார். அந்த திருமாலை தாங்குவது பாற்கடல், எனவே அவரை விட பாற்கடல் பெரியது. அந்தக் கடலையே குடித்து ஏப்பம் விட்டவர் அகத்திய மாமுனி. எனவே கடலை விட அந்த மகரிஷி உயர்ந்தவராகிறார்.
-
அகத்தியர் ஒரு கும்பத்தில் இருந்து பிறந்ததால் கும்பமுனி என்ற பெயர் பெற்றவர். எனவே சக்தி மிக்க அவரைப் பெற்ற கும்பமே பெரிதாகிறது. அந்த கும்பம் பூமியில் இருந்து பிறந்தது. அதை ஆதிசேஷன்(குண்டலினி சக்தி என்றும் கூறுவார்கள்) என்னும் நாகம் தாங்குகிறது. எனவே கும்பத்தை விட ஆதிசேஷன் பெரிதாகிறது.
-
ஆதிசேஷனை அன்னை பார்வதி தன் விரலில் மோதிரம் போல் சுற்றியிருக்கிறாள். எனவே ஆதிசேஷனை விட பார்வதி பெரியவள் ஆகிவிட்டாள். அந்த பார்வதிக்கே மணாளன் சிவன். எனவே சிவன் பெரியவர் ஆகிறார். அந்த சிவனை தன் உள்ளத்துக்குள் அடக்கி வைத்து வணங்குகிறான் பக்தன். எனவே உலகிலேயே பெரியவன் பக்தன் தான். இதனால் தான் ‘தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே’ என்று பாடியிருக்கிறேன்,” என்றார்.
-
தகுதி இல்லாதவர்களுக்கு எது கிடைத்தாலும்.அது நிலைக்காது
-
பணம் வேண்டும் என்ற ஆசையால் ஒரு கணவன், மனைவி அம்பாளை நினைத்து ஏங்கி அழுதார்கள். அம்பாள் காட்சி தந்து மூன்று பகடைகளைக் கொடுத்தாள். ஒவ்வொன்றையும் ஒரே ஒரு முறை தான் உருட்ட வேண்டும் என்றும், உருட்டும் போது மனதில் என்ன நினைக்கிறார்களோ அது நடக்கும் என்றும் சொன்னாள்.
-
மனைவி கணவனிடம், “நமக்கு நிறைய பணம் வேண்டுமென நினைத்து ஒரு பகடையை உருட்டுங்கள்,” என்றாள். கணவன் அவளிடம், “அடியே! நம் இரண்டு பேருக்கும் மூக்கு சரியில்லை. ஊரார் நம்மை ‘ஊசி மூக்கு’ என பட்டப்பெயர் வைத்து கேலி செய்கின்றனர். எனவே, நம் மூக்கு அழகாகும்படியாக சொல்லி முதலில் பகடையை உருட்டுவோம். அடுத்த காயை பணத்துக்கு வைத்து கொள்ளலாம்,” என்றான். அவளும் சம்மதித்தாள்.
-
காயை உருட்டும் போது, “எங்களுக்கு நல்ல மூக்குகள் கிடைக்கட்டும்” என்று சொல்லி உருட்டினர். ‘மூக்கு’ என்பதற்கு பதிலாக ‘மூக்குகள்’ என சொன்னதால், கை, கால், முகம், வாய், வயிறு என எல்லா இடத்திலும் மூக்குகள் முளைத்து விட்டன. வருத்தப்பட்ட தம்பதியர் அடுத்த காயை உருட்டும் போது, அவசரத்தில், “எங்களுக்கு இந்த மூக்குகள் வேண்டாம்” என சொல்லி விட்டார்கள். இப்போது நிஜ மூக்கு உட்பட எல்லா மூக்குகளும் காணாமல் போய்விட்டன. மூச்சு விடத் திணறிய அவர்கள், “அம்பாளே! எங்களுக்கு உயிர் பிச்சை கொடு. முன்பிருந்தது போல ஆக்கிவிடு” என்று மூன்றாவது காயையும் உருட்டினர். இப்போது நிலைமை சரியாயிற்று. இப்போது எல்லா பகடையும் தீர்ந்து போக, அவர்கள் நினைத்தபடி பணக்காரர்கள் ஆக முடியாமல் போயிற்று
அன்புடன் mg 🚩
No comments:
Post a Comment