சனாதன தர்மம்
==============
(உண்மையை நோக்கிய பயணம்)
*********************************************
(பகுதி -7)
---------------
1. பிரபஞ்சம் தோன்றிய காரணம்!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
நவீன விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இன்றைய அறிவியல் இதற்கு விளக்கம் கொடுக்கின்றது.
இந்த பிரபஞ்சம் உருவாக சுமார் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் திடீரென்று ஒரு பெரு வெடிப்பு ஏற்பட்டது என்றும், அப்போது முதல், நட்சத்திரங்கள், பூமி, கிரஹங்கள் எல்லாம் உற்பத்தியாகின என்றும், இன்றுவரை இந்தப் பிரபஞ்சம் பலூன் ஊதுவது போல பெருகிப் பரந்து விரிந்து கொண்டே போகின்றது என்றும், முடிவு என்ன ஆகும் என்று எங்களுக்குத் தெரியாது என்றும், இந்த மாபெரும் வெடிப்பு (BIG BANG) ஏன் ஏற்பட்டது, எப்படி ஏற்பட்டது என்பதும் எங்களுக்குத் தெரியாது என்றும் இன்றைய அறிவியல் நூல்கள் ஆராய்ந்து கூறுகின்றன.
இந்த அறிவியல் எதை உண்மை என்று கண்டுபிடித்து கூறி வந்தாலும், காலச்சக்கரத்தின் சுழற்சியில் அவைகளில் உண்மை இல்லை என்று மற்றொரு நவீன அறிவியல் அதை நிருபித்து விடும்.
இது போன்று இன்று “கடவுள்துகள்” வரைதான் இன்றைய நவீன விஞ்ஞானம் முன்னேறியுள்ளது.
ஆனால், எதை உண்மை என்று அறிவியல் இன்று நிருபிக்க வருகின்றதோ, அந்த அறிவியல் உண்மைக்கு அப்பாற்பட்டது நம்முடைய “தத்துவம்” என்பதை அன்றே நம்முடைய முன்னோர்கள் அறிந்திருந்தனர்.
அப்படிப்பட்ட முன்னோர்கள் இந்த பூமிப்பந்தில் மனித இனம் முதன் முதலாக தோன்றிய காலத்தில், பரந்த உலகத்தின் மையப் புள்ளியான நம்முடைய பாரத தேசத்தில்தான் அந்த முன்னோர்கள் தோன்றினார்கள் என்பதை அறிந்து, நாம் இந்த தேசத்தில் பிறந்தவர்கள் என்பதில் பெருமை கொள்ளலாம்.
அப்படிப் பிறந்த மனிதர்களின் பூர்வீக நாகரிகம் இந்தியாவின் வடக்கே இன்று நம்முடைய நவீன அறிவியல் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பால், கிடைத்த மிகப்பழமையான சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முற்பட்ட நாகரிகம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
அப்படி அவர்களால் கண்டு பிடிக்கப்பட்ட அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த நம் முன்னோர்களின் பூர்வீகம் அறிவின் உச்சகட்ட நிலையில் இருந்ததை நிரூபிக்கும் வகையில் அன்றே அவர்கள் இந்த பிரபஞ்சம் தோன்றிய விதத்தையும், அதன் முடிவையும் கவிதைகளாக வடித்துள்ளதை கண்டு ஆச்சரியமடைந்தார்கள் இன்றைய விஞ்ஞானிகள்.
அன்றே நம் முன்னோர்களால், இவ்வாறு கூற முடிந்ததற்குக் காரணம் அவர்களிடையே இருந்த மெய்ஞ்ஞானம் என்ற பொக்கிஷம் ஆகும்.
இந்த மெய்ஞ்ஞானத்தை அன்றிலிருந்து இன்று வரை நம்மிடையே தக்கவைத்துக் கொண்டுள்ளதினால் மட்டுமே நம்முடைய தர்மம் “சனாதன தர்மம்” என்று அனைவராலும் அழைக்கப்பட்டது.
உலகிலேயே பழமையான நூல் ஒன்று உண்டென்றால் அது ரிக் வேதம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இல்லை.
மேலும் உலகிலேயே மிகப்பெரிய பழங்கால கவிதைத் தொகுப்பு இந்த “ரிக் வேதம்” ஆகும்.
இந்த ரிக் வேதத்தோடு நவீன அறிவியல் ஆய்வாளர்கள் எழுதியுள்ள நூல்களை ஒப்பிடும் போது, ஒரு பெரிய விந்தை என்னவென்றால் நவீன அறிவியல் எதைக் கண்டு பிடித்து இன்று கூறுகின்றதோ, அதையே 7000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதாக்கிளவி என்று அழைக்கப்பட்ட இந்த வேத நூலில் ஒரு பிரம்மாவின் யுகக்கணக்கில் 1500 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் இப்போதைய பிரபஞ்சம் தோன்றியதாக காணப்படுகின்றது.
அது மட்டுமின்றி காலம் என்பது வட்ட வடிவில் பயணம் செய்யும் என்பதால் இது மீண்டும் சுருங்கி, மீண்டும் விரிவடையும் என்றும் நம்முடைய முன்னோர்கள் வகுத்த இந்த நூல்கள் விவரிக்கின்றன.
சரஸ்வதி நதி கி.மு 2000 - க்கு முன்னரே மறைந்து விட்டது என்று பாபா அணுசக்திக் கேந்திர விஞ்ஞானிகளும், நாஸா (NASA) விண்வெளியிலிருந்து எடுத்த புகைப்படமும் காட்டியதால் ரிக் வேதத்தின் காலம் கி.மு 2000 -க்கு முந்தையது என்பது உறுதியாகி விட்டது.
அது மட்டுமின்றி துருக்கியில் கிடைத்த களிமண் க்யூனிபார்ம் கல்வெட்டில் ரிக் வேதத்தில் தெய்வங்கள் எந்த வரிசைக் கிரமத்தில் இருக்கிறதோ அதே வரிசைக் கிரமத்தில் இருப்பதை கி.மு. 1400 ல் அன்றைய ஆய்வாளர்கள் கண்டு பிடித்தவுடன் ரிக்வேதம் கி.மு. 1400 லேயே துருக்கிவரை சென்றதும் உறுதியாகி விட்டது.
சரஸ்வதி நதி பற்றித் துதிக்கும் பாடல்கள் ரிக் வேதம் முழுதும் ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் காணப்படுகின்றன்.
எனவே ரிக் வேதத்தை எவரும் .கி.மு 2000 க்குக் குறைவாக மதிப்பிட முடியாது.
அதாவது மொஹஞ்சதாரோ, ஹரப்பா நாகரீகத்துக்கு முந்தையது நம்முடைய வேதகால நாகரீகம் என்பது உறுதியாகின்றது.
அப்படிப்பட்ட பழமையான வேதம் என்ன கூற வருகின்றது என்பதை அறிவதற்கு முன்னர்
வேதம் என்றால் என்ன? என்று அறிவதும் அவசியம்.
வேதம் என்பது உயர்வான அறிவு என்று பொருள் கொள்ளப்படுகின்றது.
வித் என்ற வடமொழிச் சொல்லை வேராகக் கொண்டு “வித்யா” வித்தை, வேதம் என்று வந்தது.
“வித்” என்றால் சமஸ்கிருதத்தில் அறிதல் என்று பொருளாகும்.
வேதங்கள் என்பதற்கு ’‘உயர்வான அறிவு’’ என்றும் பொருள்படும்.
தொடரும்...
No comments:
Post a Comment