Thursday 8 November 2018

விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி’ “அ

விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி’

“அஹிம்சையைப் பற்றி மகாத்மா காந்தியடிகள் போதித்த கருத்துக்கள் மக்களால் போற்றப்பட்டன. ஹிட்லரும், முசோலினியும், இடி அமீனும் அஹிம்சை பற்றி பேசியிருந்தாலோ, அல்லது இராஜபக்சே அஹிம்சை பற்றி பேசினாலோ அது முரண்பாடுகளின் மொத்த உருவமாகவும், நகைச்சுவையாகவும் மட்டுமே பார்க்கப்படும். ஊழல் ஒழிப்பு குறித்த மு.க. ஸ்டாலினின் கருத்துக்களும் இந்த வகையைச் சேர்ந்தவையே. தமிழ்நாடு அரசு நிர்வாகத்தில் ஊழலை தொடங்கி வைத்ததே திமுக தான் என்பதை ஒட்டுமொத்த தமிழகமும் அறியும். பேரறிஞர் அண்ணா அவர்களின் 2 ஆண்டு கால ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாற்றும் எழவில்லை. ஆனால், 1969-ஆம் ஆண்டில் தமிழக முதலமைச்சராக கலைஞர் பதவியேற்ற சில ஆண்டுகளில் புதிய வீராணம் திட்ட ஊழலில் தொடங்கி, பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பு ஊழல் வரை மொத்தம் 28 ஊழல் குற்றச்சாற்றுகள் எழுப்பப்பட்டதையும், அக்குற்றச்சாற்றுகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி சர்க்காரியா தலைமையிலான விசாரணை ஆணையம், அவற்றில் பெரும்பாலான குற்றச்சாற்றுகளுக்கு ஆதாரமிருப்பதாக உறுதி செய்ததையும் மக்கள் மறக்கமாட்டார்கள். அதுமட்டுமின்றி, ‘விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்த கட்சி’ என்று நீதிபதி சர்க்காரியா ஆணையத்தால் சான்றளிக்கப்பட்ட பெருமைக்குரிய கட்சி திமுக தான் என்பதும் எளிதில் மறக்கக்கூடிய ஒன்றல்ல.

2ஜி முறைகேட்டில் ஸ்டாலினுக்கும் பங்கு

இந்தியா ஊழல் நாடு என்ற தோற்றம் உலகம் முழுவதும் ஏற்பட்டதற்கு திமுக செய்த ரூ.1.76 லட்சம் கோடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தான் காரணம் என்பதை மு.க. ஸ்டாலின் வேண்டுமானால் மறந்திருக்கலாம். மக்கள் மறக்கவும் மாட்டார்கள்… மன்னிக்கவும் மாட்டார்கள். இந்த ஊழலில் கைமாறிய பணம் கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்காக எப்படி கொண்டு வரப்பட்டது? இந்த ஊழலை மறைக்க என்னென்ன தகிடுதத்தங்கள் எல்லாம் செய்யப்பட்டன? என்பதற்கு ஆதாரமாக கலைஞரின் உதவியாளர் சண்முக நாதன், உளவுத்துறை அதிகாரியாக இருந்த ஜாபர்சேட், கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனராக இருந்த சரத்குமார் ரெட்டி ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் இன்னும் இணையதளங்களில் காணப்படுகின்றன. இந்த உரையாடல்கள் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு சி.பி.ஐ. அமைப்பும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஊழலை ஒழிக்கப்போவதாக கூறும் மு.க.ஸ்டாலினுக்கும் இந்த ஊழல்களில் தொடர்பு இருப்பதற்கு ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. 2ஜி ஊழலில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக கருதப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனஅதிபர் சாகித் பால்வா சென்னை வந்து ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதாகவும், அப்போது மத்திய அமைச்சராக இருந்த ஆ. இராசாவும் உடன் இருந்ததாகவும் அமலாக்கப்பிரிவின் குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாற்றப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஸ்டாலினின் தனி உதவியாளர் இராஜாசங்கர், கணக்குத் தணிக்கையாளர் சிவசுப்பிரமணியன் ஆகியோரும் ஸ்டாலின் சார்பில் சில பேரங்களை பேசி முடித்தனர்; அதன்மூலம் ஸ்டாலினுக்கு பணம் கிடைத்தது என்றும் தில்லி நீதிமன்றத்தில் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

சாதிக்பாட்சா மர்ம மரணம்

இராசாவுக்கு நெருக்கமான தொழிலதிபர் சாதிக்பாட்சா அமலாக்கப்பிரிவு விசாரணையில் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் இக்குற்றச்சாற்றுகள் அனைத்தும் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 28.01.2011, 21.02.2011 ஆகிய நாட்களில் அமலாக்கப்பிரிவிடம் சாதிக்பாட்சா வாக்குமூலம் அளித்த நிலையில், 16.03.2011 அன்று அவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார். சாதிக்பாட்சா தற்கொலை செய்து கொண்டாரா? கொல்லப்பட்டாரா? அவரை கொலை செய்தவர்கள் யார்? என்பவை எல்லாம் மு.க.ஸ்டாலினுக்கும், அவரைச்சுற்றியுள்ள சிலருக்கும் மட்டுமே தெரிந்த உண்மைகள் ஆகும்.

ஊழல் செய்த திமுக அமைச்சர்கள்

இவை ஒருபுறமிருக்க, திமுக அரசில் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஊழலே செய்யாதவர்களா என்ற வினாவுக்கு உண்மையான பதிலை மு.க. ஸ்டாலின் அவர்களால் கூற முடியுமா? நிச்சயமாக முடியாது. அவர்கள் எந்த அளவுக்கு நியாயமானவர்கள் என்பதற்கு அவர்கள் மீது தொடரப்பட்டுள்ள சொத்துக்குவிப்பு வழக்குகள் தான் சாட்சி.

* முன்னாள் அமைச்சர் துரைமுருகன், அவரது மனைவி சாந்தகுமாரி ஆகியோர் வருவாய்க்கு மீறி ரூ. 1.40 கோடி சொத்துக்குவித்ததாக வழக்கு தொடரப்பட்டு வேலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

* முன்னாள் அமைச்சர் பொன்முடியும், அவரது மனைவி விசாலாட்சியும் ரூ.3.08 கோடி சொத்துக் குவித்ததாக 2003&ஆம் ஆண்டில் ஒரு வழக்கும், ரூ.1.75 கோடி சொத்துக்குவித்ததாக 2011&ஆம் ஆண்டில் ஒரு வழக்கும் தொடரப்பட்டு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

* முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், அவரது மனைவி செந்தமிழ்செல்வி ஆகியோர் வருவாய்க்கு மீறி ரூ.21.22 கோடி சொத்துக் குவித்ததாக 2006 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுதவிர 2011 ஆம் ஆண்டில் புதிதாக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கு கடலூர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

* முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அவரது மனைவி மீதான ரூ.21.31 லட்சம் சொத்துக்குவிப்பு வழக்கு திருவண்ணாமலை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

* முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. இராஜா, அவரது மனைவிகள் பரிமளா தேவி, உமாமகேஸ்வரி, மற்றும் உறவினர்கள் மீதான ரூ.3.32 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு ஈரோடு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

* முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி மீது ரூ.46 லட்சம் சொத்துக்குவிப்பு வழக்கு கோவை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

* முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, அவரது மனைவி சாந்தா, மகன் அருண் ஆகியோர் வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.4 கோடி சொத்துக் குவித்ததாக 2001 ஆம் ஆண்டும், ரூ.60 லட்சம் சொத்துக்குவித்ததாக 2011 ஆம் ஆண்டும் தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

* முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, மனைவி மணிமேகலை ஆகியோர் வருவாய்க்கு மீறிய வகையில் ரூ.72.97 லட்சம் சொத்துக்குவித்ததாக 2011 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

* முன்னாள் அமைச்சர் சாத்தூர் இராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, உறவினர் மூர்த்தி ஆகியோர் மீது 2011 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட ரூ.44 லட்சம் சொத்துக்குவிப்பு வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

* முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன் மீது 2011 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட ரூ.2.31 கோடி சொத்துக்குவிப்பு வழக்கு தூத்துக்குடி நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

* முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் அவரது மனைவி பாரதி, தந்தை நீலகண்ட பிள்ளை, தாய் ராஜம் ஆகியோர் ரூ.28 லட்சம் சொத்துக் குவித்ததாக 2001 ஆம் ஆண்டில் தொடரப்பட்ட வழக்கும், ரூ.14.82 கோடி சொத்துக் குவித்ததாக 2011 ஆம் ஆண்டிலும் தொடரப்பட்ட வழக்கும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

திமுகவின் 20 ஆண்டுகால ஊழல் ஆட்சி

முன்னாள் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி பெரியகருப்பன், தமிழரசி ஆகியோரின் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வழக்குப்பதிவு செய்துள்ளது. திமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் மீதான வழக்குகள் உண்மையல்ல, அவர்கள் அப்பாவிகள் என்று ஸ்டாலினால் கூற முடியுமா? திமுக அமைச்சர்கள் ஊழல் செய்ததாக கூறப்படும் தொகை குறைவாக காட்டப்பட்டுள்ளது, அவர்கள் இன்னும் அதிகமாகத் தான் ஊழல் செய்திருப்பார்கள் என்று வேண்டுமானால் கூறலாமே தவிர ஊழல் செய்யவில்லை என்று கூற முடியாது. தி. மு.க.வைச் சேர்ந்த ஒருவர் அமைச்சராகும் போது வைத்திருந்த சொத்துக்களை விட 780 மடங்கு மதிப்புள்ள சொத்துக்களை, அமைச்சராக பதவி வகித்த அடுத்த 5 ஆண்டுகளில் சேர்த்துள்ளார். தமிழ்நாட்டை திமுக 22 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது. இதில் அண்ணா ஆட்சி செய்த 2 ஆண்டுகளைத் தவிர மீதமுள்ள 20 ஆண்டுகளும் கலைஞர் தான் முதலமைச்சராக இருந்திருக்கிறார். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் ஊழல் உருவாகி பெருக்கெடுத்து, ஆறாக ஓடியது. இதை எவரும் மறுக்கமுடியாது.

ஊழல் செய்தவர்கள்தான் ஸ்டாலினின் நண்பர்கள்

திமுக ஆட்சியில் ஊழல் செய்த அமைச்சர்கள் தான் இப்போது ஸ்டாலினின் நண்பர்களாகவும், படைத் தளபதிகளாகவும் இருக்கிறார்கள். ஊழல் வழக்கில் சிக்கிய அனைத்து அமைச்சர்களுக்கும் மாவட்ட செயலாளர் முதல் துணைப் பொதுச்செயலாளர், முதன்மைச் செயலாளர் வரையிலான பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர்களை வைத்துக் கொண்டு ஊழலை ஒழிப்பேன் என்று மு.க. ஸ்டாலின் கூறுவதைப் பார்க்கும்போது, ‘‘யோக்கியர் வருகிறார்… சொம்பைத் தூக்கி உள்ளே வையுங்கள்’’ என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. திமுக ஊழலின் ஊற்றுக்கண் என்றால், அதிமுக ஊழல் சுனாமி. இந்த இரு கட்சிகளாலும் ஊழலை ஒழிக்க முடியாது; இந்த இரு கட்சிகளையும் ஒழித்தால் மட்டுமே ஊழலை ஒழிக்க முடியும். மக்களின் மறதியை மட்டுமே மூலதனமாகக் கொண்டு 50 ஆண்டுகளாக தமிழகத்தை கொள்ளையடித்து வந்த இரு கட்சிகளையும் வீட்டுக்கு அனுப்ப மக்கள் முடிவு செய்து விட்டனர். அடுத்த ஆண்டு தேர்தல் முடிவு வெளியாகும் போது இது தெரியும்.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...