Friday, 16 November 2018

மோடியை விட ஸ்டாலின் சிறந்தத் தலைவர் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்

மோடியை விட...

     நேற்று, சென்னைக்கு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மோடியை விட ஸ்டாலின் சிறந்தத் தலைவர் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார்.

     இந்தக் கண்டுபிடிப்பை,  நாயுடு எங்கே, எப்போது , எதை வைத்துக் நிகழ்த்தினார் என்று தெரிய வில்லை. கடந்த 4 ஆண்டுகளாக தெரியாத இந்த ‘ரகசியம்’ , கருணாநிதி இறந்து , ஸ்டாலின் தி மு க த் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு தான் , நாயுடுவுக்குத் தெரிந்ததா என்று தெரியவில்லை!

     அல்லது, ஸ்டாலின், ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்க செனட், போன்ற ஏதாவது ஒன்றில் (உளறாமல்) உரை  நிகழ்த்தி, அதில் மோடி நம் நாட்டுக்குக் கொண்டு வந்திருக்கும் திட்டங்களை விடப் பிரம்மாண்டதாக எதையாவது தெரிவித்துள்ளாரா என்றும் புரிய வில்லை.

     எனக்கு ஏற்படும் சந்தேகம் எல்லாம், நாயுடுவுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் ஞானம், ஏன் கே ஏ கிருஷ்ணசாமியிடம் பல தேர்தல்களில், ஆயிரம் விளக்குத் தொகுதியில் மண்ணைக் கவ்விய ஸ்டாலினுக்கு, ஓட்டுப் போடாத பெருவாரியான வாக்காளர்களுக்குத் தெரியவில்லை என்பது தான்.

     சரி, அப்பா அமைச்சரவையில், 5 ஆண்டு காலம் , “துணை முதல்வராக” க் குப்பை கொட்டிய ஸ்டாலின், அப்போது ஏதாவது தமிழ் நாட்டுக்கு பெரிதாக செய்து, அதனால் எழுச்சியோ, புரட்சியோ,  ஏற்பட்டு, எதற்கெடுத்தாலும் “காமராஜ் ஆட்சி” என்று சொல்வதற்குப் பதிலாக, “ஸ்டாலின் சூப்பர்  ஆட்சி என்றோ “தளபதி தன்னிகரில்லா ஆட்சி” என்றோ, பெயர் வாங்கி உள்ளாரா என்றால், கண்ணுக்கு எட்டிய வரை அப்படி ஒன்றும் செய்திருப்பதாகத் தெரிய வில்லை.

     சரி, டீமானிடைசேஷன், நவோதயாப் பள்ளிகள் ஏற்படுத்துதல், பாகிஸ்தான், சைனா ஆகிய நாடுகள் வாலை நறுக்குதல், பல நாடுகளை நண்பர்களாக்கிக் கொள்ளுதல், ஆற்றில் சரக்குக் கப்பல்களை விடுதல், போன்ற பல சிறந்த செயல்களுக்கு, ரகசிய ஆலோசனைகளை மோடிக்கு, ஸ்டாலின் கொடுத்திருந்து, அது நாயுடுவுக்குத் தெரிந்திருக்குமோ, என்றும், தெரிய வில்லை.

     ஒரு வேளை, அருண் ஜெய்ட்லியோ, பி சிதம்பரமோ, மன் மோகன் சிங்கோ, ரகுராம் ராஜனோ, உர்ஜித் படேலோ,  ஸ்டாலினிடம் நிதி சம்பந்தமான ஆலோசனைகளையோ, ரிசர்வ் வங்கி சம்பந்தப் பட்ட யோசனைகளையோ கேட்டுத்தான் மேல் நடவடிக்கை எடுக்கிறார்களா என்பதும் புரிய வில்லை.

     கட்காரி, இந்தியா முழுதும் சாலைகலைப் போடுவதற்கு ஸ்டாலினின் யோசனைகளுக்கு செவி சாய்க்கிறார் என்றோ, நிர்மலா சீதாராமன், ராணுவ விஷயங்களில் ஸ்டாலினின் மேலான ஆலோசனைகளை ஏற்கிறார் என்றோ, பீயுஷ் கோயல் ரயில்வேயின் சிறப்பான மேலாண்மைக்கு ஸ்டாலினைத் தான் நம்பி இருக்கிறார் என்றோ யாரும் இது வரை சொல்ல வில்லை.
    
ஒரு வேளை, சந்திரபாபு நாயுடு, கோதாவரியில் இருந்து, கிருஷ்ணா வரை கால்வாய் வெட்டியதில் ஸ்டாலின் பங்கு ஏதாவது இருக்குமோ?

அப்படியானால், ஏன் அந்த மாதிரி பங்கை, பதவியில்  இருந்த போதும்,  இப்போதும், இங்கிருக்கும் காவிரி- வைகை, தாமிரவருணி இணைப்புக்கு அவர் ஆற்ற வில்லை?

     ஏன், சொந்த அண்ணன் அழகிரியே, ஸ்டாலின் மோடிக்கு இணையானவர் என்று இது வரை சொல்ல வில்லையே! அவர் சொல்லி விட்டால், நாயுடு பேச்சுக்கு கொஞ்சம் மதிப்பு கொடுக்கலாம்.

     தான் மறுபடியும் தேர்தலில் ஜெயிக்க, ஆந்திராவுக்கு, சிறப்பு உதவிகளை, மத்திய அரசிடம் நாயுடு கேட்டார். அவர்களும், சட்டத்துட்பட்டுக்  கொடுத்தனர்.

நாயுடு , அதற்குக் கணக்குக் கொடுக்க வில்லை. பணம் பல்வேறு வழிகளில் திருப்பப் பட்டு விட்டது. அதனால் மேற்கொண்டு மத்திய அரசிடம் இருந்து பணம் பெயர வில்லை. நாயுடுவுக்குக் கோபம். அது, ஒய் எஸ் ஆர் ஜெகன் ரெட்டியின் புகழ் மேலும் மேலும் பெருகுவதைக் கண்டு, தீவிரமடைந்தது.

“எதைத் தின்றால் பித்தம் தெளியும்” என்று, தன் மாமனார், சிறப்பு மிக்க என் டி ஆர் தன் விரோதியாக பாவித்திருந்த காங்கிரஸ் கட்சியிடம் இழைவதில் வந்து அது முடிந்திருக்கிறது. என் ஆந்திர நண்பர் ஒருவரைக் கேட்டேன். அடுத்த தடவை ஜகன் ரெட்டி தான் வருவார் என அவர் அபிப்பிராயப் படுகிறார். பா ஜ க, வும் உண்மையை அறிந்து, நாயுடுவைக் கழற்றி விட்டு விட்டது. அவருக்குப் போக்கிடம் இல்லை.

எனவே, “காமாலைக் கண்ணனுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள்” என்பது போல, ஸ்டாலின் இவருக்கு டிரம்ப் அளவுக்குப் பெரியவராகத் தெரிகிறார்.

ஸ்டாலினும் இல்லா விட்டால், சீமானிடம் போய், இதையே சொல்ல நாயுடு தயங்க மாட்டார் என்பது தான் உண்மை.

No comments:

Post a Comment

CAA என்றால் திமுக க்கு தெரியாது

CAA என்றால் என்ன தி.மு.கவினருக்கு தெரிந்த ஒரே பதில் தெரியாது ? தலைமை முதல் தொண்டர்கள் வரை எதற்கு எதிர்க்கிறோம் தெரியாமல் போராடும் அவலம் ! தி...