🌸வேதம் பயில்வோம்-பாகம்-40-அதர்வண வேதம்
-
முண்டக உபநிஷதம்:
-
ஆன்ம தரிசனத்திற்கான கருவி மனம்: 9-10
-
அத்தியாயம்-5 மந்திரம்-9
-
ஏஷோஸணுராத்மா சேதஸா வேதிதவ்யோ
யஸ்மின் ப்ராண: பஞ்சதா ஸம்விவேச/
ப்ராணைச்சித்தம் ஸர்வமோதம் ப்ரஜானாம்
யஸ்மின் விசுத்தே விபவத்யேஷ ஆத்மா //9//
-
பொருள்
-
9. நுண்ணியதான இந்த ஆன்மாவை மனத்தால்
தான் அறிய வேண்டும். உடம்பில் பிராணன் ஐந்து
விதமாகச் செயல்படுகிறது. உயிரினங்களின் மனம்
முழுவதும் புலன்களால் வியாபிக்கப்பட்டுள்ளது.
இந்த மனம் தூய்மை பெறும்போது ஆன்மா அங்கே
ஒளிர்கிறது.
-
அகவுலகம் சம்பந்தமான எதையும் சாதிப்பதற்கு நம்மிடம் உள்ள கருவி மனம் மட்டுமே. ஆன்மக் காட்சி பெறுவதற்கும் இங்கே அந்த மனமே கருவியாக வைக்கப்பட்டுள்ளது. எந்த மனம் ஆன்மாவைக் காட்ட வல்லது?
கட்டாயமாக சாதாரண மனம் அல்ல. முந்தின மந்திரங்களில் கூறியதுபோல் உண்மை, தவம், உறுதியான அறிவு, பிரம்மச்சரியம் போன்றவற்றால் புனிதம் பெற்ற மனம் (3:1.5) தெளிவு பெற்ற புத்தியால் தூய்மை பெற்ற மனம் (3:1.8). இத்தகைய மனம் தீபம் போன்றது, ஆன்மாவின் மூலைமுடுக்குகளை எல்லாம் காட்டக் கூடியது என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
-
ஆன்மக் காட்சிக்கான கருவி மனமாக இருந்தாலும் சாதாரண நிலையில் அது அந்தத் தகுதி வாய்ந்ததாக இல்லை. ஏனெனில் அது புலன்களால் வியாபிக்கப்பட்டுள்ளது. புலன்கள் புறவுலகிலிருந்து கொண்டு வருகின்ற அறிவால் நிறைந்துள்ளது. புத்தி விழிப்புறும்போது, அதன் ஒளியால் மனம் இந்த அறிவிலிருந்து விடுபடுகிறது. இதையே கீதை (10.11) புத்தி விழிப்புற்றவன் தன் இதயத்தில் பேரொளியைக் காண்கிறான். அதனால் அவனது அறியாமை அகல்கிறது என்று கூறுகிறது.
-
உடம்பும் மனமும் இரண்டு கருவிகள். மனத்தைத் தூய்மைப்படுத்துவதுபற்றி கண்டோம். உடம்பும் தகுதியானதாக இருக்க வேண்டும் என்பதை இந்த மந்திரம் கோடி காட்டுகிறது. உடம்பை எவ்வாறு தகுதியானதாக வைத்துக் கொள்வது? பிராணனைக் கட்டுப்படுத்துவதன்மூலம். பிராணன் (மேல் நோக்கிய இயக்கம்), அபானன் (கீழ் நோக்கிய இயக்கம்), வியானன் (எல்லா பக்க இயக்கம்), உதானன் (மரண வேளையில் உயிர் வெளியேற உதவுதல்), ஸமானன் (உணவு ஜீரணம், உணவை ரத்தம் போன்றவையாக மாற்றுதல்) என்று பிராணன் ஐந்துவிதமாக நமது உடம்பில் செயல்படுகிறது. பிராணனைக் கட்டுப்படுத்துவதன்மூலம் உடம்பையும் நாம் கட்டுக்குள் கொண்டுவர முடியும். எல்லையற்ற ஆற்றலின் கதவை இது நமக்குத் திறந்து விடுகிறது. உதாரணமாக ஒருவன் ஒருவேளை பிராணனை முற்றிலுமாக அறிந்து அதைக் கட்டுப்படுத்தி விட்டால் உலகில் எந்த சக்திதான் அவனுடையது ஆகாது? என்று கேட்கிறார் சுவாமி விவேகானந்தர்.
-
இவ்வாறு தெளிவு பெற்ற மனத்தின் ஆற்றல்பற்றி அடுத்த மந்திரம் கூறுகிறது.
-
மந்திரம்-10
-
யம் யம் லோகம் மனஸா ஸம்விபாதி
விசுத்தஸத்வ: காமயதே யாம்ச்ச காமான்/
தம் தம் லோகம் ஜயதே தாம்ச்ச காமான்ஸ்-
தஸ்மாத் ஆத்மஜ்ஞம் ஹ்யர்ச்சயேத் பூதிகாம: //10//
-
பொருள்
-
10. தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால்
ஒருவன் எந்தெந்த உலகங்களை நினைக்கிறானோ
அந்தந்த உலகங்களை அடைகிறான்: என்ன பொருட்
களை விரும்புகிறானோ அந்தப் பொருட்களைப்
பெறுகிறான். அதனால் செல்வத்தை விரும்பு
பவன் ஆன்மஞானியைப் போற்ற வேண்டும்.
-
மனத்தால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை - சாதாரண மனத்தால் அல்ல, தூய்மையும் நுண்மையும் பெற்ற மனத்தால். அத்தகைய மனத்தைப் பெறுவதற்கு ஓர் எளிய வழி இங்கே கூறப்படுகிறது. - ஆன்மாவை உணர்ந்த மகான்களைப் போற்றுதல், மகான்களின் அருளால் சாதிக்க இயலாதது எதுவும் இல்லை.
அத்தியாயம் 5 நிறைவுற்றது
-
வேதபாடம் தொடரும்...
---
இந்துமதம் வாட்ஸ்அப் குழுவில் இணைய 9789 374 109 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கு உங்கள் வாட்ஸ்அப் மூலம் ரிக்கொஸ்ட் அனுப்பவும்
-----
No comments:
Post a Comment